சிங்கம்புணரியில் பொதுமக்களை விரட்டிச்சென்று கடிக்கும் நாய்கள்


சிங்கம்புணரியில் பொதுமக்களை விரட்டிச்சென்று கடிக்கும் நாய்கள்
x
தினத்தந்தி 7 July 2018 3:45 AM IST (Updated: 7 July 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் பொதுமக்களை நாய்கள் விரட்டிச்சென்று கடித்து காயத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி நகரில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களால் பெரும் அவதிஅடைந்து வருகின்றனர். இதில் குறிப்பாக வடக்குத்தெரு, கிழக்காட்டு ரோடு சாலை, பாரதி நகர், காசியாபிள்ளை நகர் ஆகிய பகுதியில் தெரு நாய்கள் அதிகஅளவில் சுற்றித்திரிகிறது.

இதையடுத்து இப்பகுதி மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு பணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது இப்பகுதியில் சுற்றித்திரியும் இந்த நாய்கள் அவர்களை கடித்து பதம் பார்க்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

மேலும் சிங்கம்புணரி பெரியகடை வீதி சாலைகளில் சுற்றித் திரியும் இந்த தெரு நாய்கள் அந்த பகுதியில் மற்ற நாய்களுடன் ஒன்றுக்கொண்டு சண்டையிட்டு அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களை விரட்டி சென்று கடிப்பதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் இந்த வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை கடித்து காயத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த பகுதியில் நேற்று சின்னையா(வயது 75) என்ற முதியவரை நாய் ஒன்று கடித்து குதறியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த பகுதியில் இவ்வாறு நாய் கடி வாங்கியவர்கள் இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே சிங்கம்புணரி பகுதியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த சிங்கம்புணரி பேரூராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story