நாக்பூரில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சட்டசபையை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு மின்சாரம் துண்டிப்பு; சபை ஒத்திவைப்பு


நாக்பூரில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சட்டசபையை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு மின்சாரம் துண்டிப்பு; சபை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 7 July 2018 12:00 AM GMT (Updated: 6 July 2018 10:17 PM GMT)

கனமழையால் நாக்பூரில் நடந்து வரும் சட்டசபையை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது.

நாக்பூர், 

கனமழையால் நாக்பூரில் நடந்து வரும் சட்டசபையை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது.

மராட்டிய அரசு மழைக்கால சட்ட சபை கூட்டத் தொடரை மாநிலத் தின் 2-வது தலை நகரம் என்று அழைக் கப்படும் நாக்பூரில் நடத்துவது என முடிவு செய்தது.

நாக்பூரில் சட்டசபை கூட்டம்

நாக்பூரில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு கூட்டத் தொடரை கூட்டுவது வழக் கமான நிகழ்வுதான் என்றா லும், மழைக்கால கூட்டத் தொடர் நாக்பூரில் இதற்கு முன்பு 3 முறை மட்டுமே கூட்டப்பட்டது.

இதற்கு முன்பு 1971-ம் ஆண்டு தான் நாக்பூரில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட் டது. சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு மீண்டும் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

மழைவெள்ளம்

இந்தநிலையில் நேற்று நாக்பூரில் பெய்த பலத்த மழை, அங்கு நடந்துவரும் சட்டசபை கூட்டத் தொடருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

கனமழை காரணமாக சட்டசபை வளாகமான விதான் பவனை சூழ்ந்த வெள்ளம் அங்குள்ள மின் சார வினியோக அறைக்குள் புகுந்தது. இதனால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே விதான் பவனுக்கு செல்லும் மின்சாரம் தடைப்பட்டது. நிலைமையை சீர்செய்வதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கூட்டத்தொடர் துவங்கியதும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதையும், சீரமைப்பு பணிகளையும் காரணம் காட்டி சட்டசபை மற்றும் மேலவை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

கண்டனம்

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனாவும் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து சிவசேனா கட்சியை சேர்ந்த சுனில் பிரபு கூறியதாவது:-

இதுபோன்ற சம்பவம் மும்பையில் நடந்திருந்தால் உடனே அனைத்து கட்சிகளும் சிவசேனா வழிநடத்தும் மும்பை மாநகராட்சி மீது குறைகூறி இருக்கும். அனைவரும் மும்பை மாநகராட்சி மீது விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்கள்.

நாக்பூர் மாநிலத்தின் 2-வது தலைநகரமாகும். நாக்பூர் மாநகராட்சி பா.ஜனதாவின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தியிருந்தால் மழையால் சட்டசபை கூட்டத்தொடர் பாதிக்கும் நிலை வந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் மந்திரிகளின் பங்களாக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மோசமான நிர்வாகம்

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான பாஸ்கர் ஜாதவ் கூறுகையில், “அரசு மழைக்கால கூட்டத்தொடரை நாக்பூரில் நடத்துவது என்று முடிவு செய்த நிலையில், இங்கு பேரிடர் மேலாண்மைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்றார்.

மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பா.ஜனதா அரசின் மோசமான நிர்வாக திறனால் தற்போது சட்டசபை கூட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மந்திரி விளக்கம்

இதுகுறித்து மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மழைவெள்ளம் தேங்காதபடி சாலைகள் சீரமைக்கப்பட்டு, உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் மழைவெள்ளம் தற்போது விதான் பவனில் புகுந்துள்ளது. இது முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையாகும்.

இருப்பினும் மழைநீர் முறைப்படி வெளியேற்றப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மழைவெள்ளத்தின் காரணமாக காலை 10 மணிக்கு கூடிய சட்டசபை கூட்டத்தொடர் 11 மணிக்கும், பின்னர் மதியம் 12 மணிக்கும் இரு தடவை ஒத்திவைக்கப்பட்டது.

துண்டிக்கப்பட்ட மின்வசதி 11.30 மணி அளவில் சரிசெய்யப்பட்டது. நாங்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துணை என்ஜினீயருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாக்பூரில் மழை வெள்ளம் காரணமாக சட்டசபையை வெள்ளம் சூழ்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story