ஆந்திராவை சேர்ந்த வியாபாரியிடம் ஆன்லைனில் 10 டன் புளி வாங்கி ரூ.10 லட்சம் மோசடி
ஆந்திராவை சேர்ந்த வியாபாரியிடம் ஆன்லைனில் 10 டன் புளி வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரயாஸ். இவர் ஆன்லைன் மூலம் அரிசி, புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வியாபாரிகள் கோபி (வயது 35), சிவராஜ் (41), மகேஷ் (41) ஆகியோர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளனர்.
அவரிடம் நாங்களும் கோவையில் புளி வியாபாரம்தான் செய்து வருகிறோம். எங்களுக்கு 10 டன் புளியை அனுப்பி வையுங்கள். புளி எங்களுக்கு வந்து சேர்ந்ததும் அதற்கான தொகை ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்து 425-ஐ உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம் என்று கூறி உள்ளனர்.
இதை நம்பிய ரயாஸ், 10 டன் புளியை லாரி மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்டதும் கோபி, சிவராஜ், மகேஷ் ஆகியோர் ரயாசை தொடர்பு கொண்டு புளி தங்களுக்கு வந்து சேர்ந்தது. பணத்தை உடனடியாக அனுப்பி விடுகிறோம் என்று கூறி உள்ளனர். ஆனால் ஒரு வாரம் ஆகியும் அவர்கள் பணத்தை அனுப்பவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து ரயாஸ், அவர்களை தொடர்பு கொண்டு பணம் ஏன் அனுப்பவில்லை என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் வியாபாரம் காரணமாக தாமதம் ஆகிவிட்டது. உடனே அனுப்பி விடுகிறோம் என்று கூறி உள்ளனர். இருந்தபோதிலும் அவர் கள் பணத்தை ரயாசின் வங்கி கணக்கில் செலுத்தவில்லை.
20 நாட்கள் கழித்து மீண்டும் அவர்களை தொடர்பு கொண்ட ரயாஸ், ஏன் பணம் அனுப்பவில்லை என்று கேட்டபோது, அவருக்கு கோபி, சிவராஜ், மகேஷ் மற்றும் அவரின் உதவியாளர் சஞ்சய் (23), டிரைவர் விமல் (27), ராமமூர்த்தி ஆகியோர் சேர்ந்து பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியதுடன் அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயாஸ், இந்த மோசடி தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை நேரில் சந்தித்து புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டுசதி ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான கோபி உள்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 டன் புளி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராமமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story