மாவட்ட செய்திகள்

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால்போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடும் சென்னை + "||" + Traffic jams in Chennai

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால்போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடும் சென்னை

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால்போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடும் சென்னை
சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னை,

மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாடும், மாநிலமும் வளர்ச்சியடைந்த பாதையை நோக்கி செல்கின்றது என்று அர்த்தம். உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என்றால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கவேண்டியது என்பது தவிர்க்கமுடியாதது. சென்னை நகரத்தில் பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை கட்டமைப்புகள் இல்லை என்பது கசப்பான உண்மை.

அரசு போக்குவரத்துத்துறை பதிவேடுகளின்படி கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 ஆகும். இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 210 ஆகும். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 82 சதவீதம் ஆகும்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தலைநகர் சென்னையில் பிரதான சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நிரம்பி வழிவதை காணமுடிகிறது. நடைபாதைகளே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் ஒரு பக்கம். இதனால் ‘நடைபாதை நடப்பதற்கே’ என்ற நிலை மாறி ‘நடைபாதை ஆக்கிரமிப்பதற்கே’ என்று ஆகிவிட்டது. இதுதவிர ‘நோ பார்க்கிங்’ என்று போக்குவரத்து போலீசார் வரையறுத்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற காரணங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆமை வேகத்திலேயே வாகனங்கள் முன்னேறி செல்ல முடிகிறது. சரியான இடத்துக்கு, உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலிலேயே வாகனங் களை இயக்கும் நிலை உள்ளது.

பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எழும்பூர், பிராட்வே, புரசைவாக்கம், சென்னை சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் பசுமைவழிச்சாலை வழியாகவே வாகனங்களில் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அந்த சாலைகளை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் காலை நேரத்தில் பசுமை வழிச்சாலை சந்திப்பில் இருந்து அடையாறு பாலம் வரையிலும் வாகனங்கள் வரிசையாக நின்று செல்லவேண்டிய நிலை இருக்கிறது. பசுமை வழிச்சாலை சந்திப்பை கடந்து செல்வதற்கே சராசரியாக வாகன ஓட்டிகளுக்கு 10 முதல் 15 நிமிடம் வரையிலும் எடுத்துக் கொள்கிறது. இதனால் அலுவலகங்களுக்கு ஊழியர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளும் கால தாமதமாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

சிக்னல் கடந்த சில நாட்களாகவே பழுதாகி கிடப்பதால், பசுமைவழிச்சாலை சந்திப்பில் சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இடையூறு இல்லாமல் சாலையை கடந்து செல்வதற்கு ஆகாய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்பதை தினசரி காணமுடியும். அந்த பகுதியில் உள்ள சிக்னலும், கண்காணிப்பு கேமராவும் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. ஆனால் அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

சிக்னல் பழுதாகி கிடப்பதால், மிக முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் வரும் நேரங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்திவருகின்றனர். மற்ற நேரங்களில் ஒழுங்குபடுத்தாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரும், போக்குவரத்து நெரிசல் மட்டும் தீர்ந்தபாடு இல்லை. இதேபோல நகரின் பல்வேறு இடங்களிலும் நெரிசல் நிலவி வருகிறது.

போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரமே திக்குமுக்காடி வருகிறது. சென்னை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டிலும் சுரங்கபாதைகள், மேம்பாலங்கள் கட்டுவதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அரசு பஸ் சேவைகள், மெட்ரோ ரெயில் மற்றும் மின்சார ரெயில் சேவை களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தி, கட்டணத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு செய்து, பொதுத்துறை போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிப்பு செய்வதன் மூலம் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்களை கணிசமாக குறைக்கலாம் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...