பாலம் கட்டும் பணியால் பஸ்கள் நிறுத்தம்: தினமும் 6 கி.மீட்டர் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்
சாணார்பட்டி அருகே பாலம் கட்டும் பணியால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு 6 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சியில் முடிமலை ஓடையின் குறுக்கே செ.குரும்பபட்டி, செங்குறிச்சி, முடிமலைகோவில், லிங்கபுரம், புளியம்பட்டி ஆகிய இடங்களில் 7 பாலம் கட்டும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி தொடங்கியவுடன் திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி வழியே ஆலம்பட்டிக்கு செல்லும் ஒரு அரசு டவுன்பஸ், ஒரு தனியார் டவுன்பஸ் மற்றும் தாராபுரத்திலிருந்து வடமதுரை வழியே செங்குறிச்சிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் ஆகிய மூன்றும் நிறுத்தப்பட்டன.
இதனால் லிங்கபுரம், பாண்டியனூர்,் சடையம்பட்டி, மேட்டுக்களம், ஆண்டியபுரம், பிச்சம்பட்டி, காவல்காரன்பட்டி, புளியம்பட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போக்குவரத்து வசதி இல்லாமல் செ.குரும்பபட்டிக்கு 6 கிலோமீட்டர் நடந்து சென்றும், ஆட்டோ, மொபட்டில் சென்றும் பின் அங்கிருந்து திண்டுக்கல் செல்லும் நிலை உள்ளது.
குறிப்பாக இந்த கிராமங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் செங்குறிச்சி அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதால் தங்களின் படிப்பு பாதிப்பதாகவும், பள்ளிக்கும் குறித்த நேரத்தில் செல்லமுடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர் மேலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திண்டுக்கல் மற்றும் வடமதுரையில் உள்ள கல்லூரிகளில் படித்தும், வேலைக்கும் செல்கின்றனர். இவர்கள் அனைவரும் கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.
தற்போது 5 பாலங்களில் பணி ஓரளவு முடிவடைந்துள்ளது. புளியம்பட்டியில் மட்டும் 2 பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அந்த இடங்களில் மாற்றுப்பாதை முறையாக அமைக்கப்படவில்லை. இருந்த போதும் அதன் வழியாக தற்போது சரக்கு லாரிகள் வடமதுரையிலிருந்து ஆலம்பட்டி வழியாக செங்குறிச்சிக்கு செல்லத் தொடங்கிவிட்டன. எனவே இந்த மாற்றுப்பாதையை, முறையாக பஸ்கள் செல்லும் வகையில் பாதுகாப்பாக அமைத்து நிறுத்தப்பட்ட மூன்று பஸ்களையும் உடனடியாக இயக்க வேண்டும் என்றும், பாலம் கட்டும் பணியையும் விரைந்து முடிக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story