தேனி அருகே ஏ.டி.எம். மைய வாசலில் பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் பறிப்பு: வாலிபர் பிடிபட்டார்


தேனி அருகே ஏ.டி.எம். மைய வாசலில் பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் பறிப்பு: வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 7 July 2018 5:15 AM IST (Updated: 7 July 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஏ.டி.எம். மைய வாசலில், பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி, 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி அருகே உள்ள சடையால்பட்டியை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவுன்தாய் (வயது 35). சம்பவத்தன்று இவர், தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார்.

அவருக்கு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கத் தெரியவில்லை. இதனால், அங்கு வந்த ஒரு வாலிபரிடம் பணத்தை எடுத்துக் கொடுக்குமாறு உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபரும் ரூ.15 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுத்துக் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பவுன்தாய் தனது கைப்பையில் அந்த பணத்தை வைத்துவிட்டு ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பணம் எடுத்துக் கொடுத்த அந்த வாலிபர் திடீரென பவுன்தாயின் கைப்பையை பறித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

பணத்தை பறிகொடுத்த அவர், இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் விசாரணை நடத்தினார். விசாரணையில் பணம் பறித்த வாலிபர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண் அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது பணம் பறித்துவிட்டு தப்பிச் சென்றவர் போடி வடக்கு ரத வீதியை சேர்ந்த கணேசன் மகன் ஈஸ்வரன் (வயது 26) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story