வியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு


வியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 7 July 2018 5:18 AM IST (Updated: 7 July 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் வியாபாரியின் மொபட்டில் இருந்த ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

சிதம்பரம், 

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிதம்பரம் புதுப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(வயது 75). வியாபாரி. இவர், ஏலச்சீட்டு நடத்தும் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.2 லட்சத்துக்கான மாதந்தோறும் பணம் கட்டி வந்தார். குஞ்சிதபாதத்துக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கேட்டார். அதன்படி அந்த நிறுவனம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கான காசோலையை குஞ்சிதபாதத்திடம் வழங்கியது.

அந்த காசோலையை மாற்றி பணம் பெறுவதற்காக குஞ்சிதபாதம் நேற்று மதியம் 12 மணி அளவில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வந்தார். அங்கு காசோலையை கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

வங்கியின் முன்பு நிறுத்தி இருந்த தனது மொபட் சீட்டின் அடியில் பணத்தை வைத்து குஞ்சிதபாதம் பூட்டினார். பின்பு அவர் அருகில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் சீட் திறந்து கிடந்தது. அதன் அடியில் இருந்த பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குஞ்சிதபாதத்திடம் விசாரித்தனர். விசாரணையில், குஞ்சிதபாதம் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்து மொபட்டில் வைத்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதனை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வங்கியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களில், குஞ்சிதபாதத்தின் மொபட்டில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிய காட்சி பதிவாகி இருக்கிறதா? என்று வீடியோ காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story