10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை தொழிலாளர் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சாதிக்அலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துராஜ், துணைத்தலைவர் பால்ராஜ் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், ரேஷன்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரேஷன்கடை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரே துறையின் கீழ் அனைத்து ரேஷன்கடை ஊழியர்களையும் கொண்டு வரவேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய் ஆகியவற்றை எடை குறையாமல் ரேஷன்கடைகளுக்கு வழங்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு சேதார கழிவாக 3 சதவீதம் அனுமதிக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு விட்டதால் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகை ரூ.1,343 கோடியை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
ரேஷன்பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story