மாவட்ட செய்திகள்

மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி; 5 பேர் படுகாயம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம் + "||" + A car crash in the tree kills private company manager; 5 people were injured

மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி; 5 பேர் படுகாயம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்

மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி; 5 பேர் படுகாயம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
தேவதானப்பட்டி அருகே மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
தேவதானப்பட்டி,

தஞ்சாவூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர், தனது உடன் வேலை பார்க்கும் ஊழியர்களுடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். காரை சரவணன் ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மலையடிவாரத்தில் தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காப்பட்டி பகுதியில் ஒரு வளைவில் கார் திரும்பியது.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் அவருடன் வந்த ஊழியர்கள் கோகுலகண்ணன் (29), அத்துல்லா (25), சுந்தர் (33), சதீஷ்குமார் (29), மற்றொரு சரவணன் (42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த கோகுலகண்ணன் உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...