மாவட்ட செய்திகள்

திருப்பூரில்பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை + "||" + In Tirupur The school student is dead and committed suicide Police investigation

திருப்பூரில்பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை

திருப்பூரில்பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை
திருப்பூரில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நல்லூர்,

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


திருப்பூர்-காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் ஆர்.வி.நகர் 2-வது வீதியில் உள்ள பூமிநாதன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு பிரதீஷ் (வயது 19), விக்னேஷ் (14) என்ற 2 மகன்கள் உள்ளனர்.


சந்திரசேகர் திருப்பூரில் உள்ள ஒரு டையிங் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். விஜயராணி தையல் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். பிரதீஷ் திருப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விக்னேஷ் திருப்பூர் தொட்டிபாளையத்தில் உள்ள ஜெய்ரூபா மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அதுபோல் மாணவர்களும் கல்லூரி, பள்ளிக்கு சென்றுவிட்டனர். மாலையில் பிரதீஷ், விக்னேஷ் இருவரும் வீட்டிற்கு வந்தனர். சிறிது நேரத்தில் பிரதீஷ் வெளியே சென்றுவிட்டார். விக்னேஷ் மட்டும் வீட்டில் இருந்தார்.

வேலை முடிந்து கணவன்-மனைவி இருவரும் இரவு 8.30 மணி அளவில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதற்குள் பிரதீஷ் அங்கு வந்தார். அவரும் கதவை தட்டிப்பார்த்தார். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் விக்னேஷ் தூங்கி இருக்கலாம் என்று நினைத்தனர். எனவே வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் விக்னேஷ் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


உடனடியாக இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று விக்னேசை மீட்டனர். பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவனை கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தான். மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

மாணவன் விக்னேஷ் எதற்காக தற்கொலை செய்துகொண்டான் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் பருதுனிஷா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.