மாவட்ட செய்திகள்

சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில்ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்பு வைத்து பூஜை + "||" + Sivanamalai Subramaniya Samy temple Lord Puja with the arrows in the order of the Lord

சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில்ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்பு வைத்து பூஜை

சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில்ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்பு வைத்து பூஜை
காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலின் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.

காங்கேயம்,


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலின் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பக்தர்களிடையேயும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.


வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் இந்த பெட்டி உள்ளது. ஆண்டவன் உத்தரவால் பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் ஏதாவது ஒரு பொருளை இந்த பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம். இது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.


சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும் படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை நேரடியாக அணுகி தனது கனவில் ஆண்டவன் கூறிய அந்த பொருளை பற்றி கூறுவார்.

அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் வைத்து சிவப்பு, வெள்ளை நிறத்தினால் ஆன 2 பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும். அந்த பொருளுக்கு தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜை செய்யப்படும்.


இவ்வாறு ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்பது எதுவும் கிடையாது. மற்றொரு பக்தரின் கனவில் முருகன் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருளே அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இவ்வாறு இங்கு 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்த பொருள் காரணமாக நாட்டில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.


அந்த வகையில் இதற்கு முன்பு இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் ஏர்கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி முதல் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு புத்தகம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் அருகம்புல், மிளகு, கீழா நெல்லிவேர் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.

அந்த வகையில் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தாமிரத்தால் செய்யப்பட்ட 1½ அடி உயரமுள்ள அம்பு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதை திருவண்ணாமலையை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரான கென்னடி (வயது 51) என்பவர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். கடந்த மாதம் 30-ந் தேதி இவருடைய கனவில் வந்த முருகன் இந்த அம்பை சிவன்மலை கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கும்படி கூறியுள்ளார். அதை தொடர்ந்தே கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெறப்பட்டு தாமிரத்தால் செய்யப்பட்ட இந்த அம்பு ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி பக்தர்கள் கூறுகையில், சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளால் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு வில் அம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. தற்போது தாமிரத்தால் ஆன அம்பு மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகபோகத்தான் தெரியவரும் என்றனர்.