பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை நகல் எரிக்கும் போராட்டம்


பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை நகல் எரிக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 7 July 2018 12:22 AM GMT (Updated: 7 July 2018 12:22 AM GMT)

திருவண்ணாமலையில் பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை, 

சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 8 வழி பசுமைச்சாலைக்கு ஏராளமான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு அருகில் இளம்பெண் ஒருவர் கழுத்தில் பிளேடால் வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும் நிலம் அளவிடும் பணி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் 8 வழி பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் ஜூலை 6-ந் தேதி இந்த திட்டத்திற்கான அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த போராட்டம் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா அருகே நடைபெறும் என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை அறிவொளி பூங்கா அருகில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு தனித்தனியாக அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கம்யூனிஸ்டு கட்சியினர், மாதர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே கட்டாயப்படுத்தி போலீசாரின் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அவர்கள் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லையே, எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது திடீரென விவசாயி ஒருவர் கையில் பேப்பர் ஒன்றை கொளுத்தி கொண்டு, 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி வந்தார். இதையடுத்து போலீசார் விவசாயியின் கையில் இருந்து எரிந்து கொண்டிருந்த பேப்பரை பிடுங்கி எறிந்தனர். பின்னர் அவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் 2 பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சில விவசாயிகள் மற்றும் 8 வழி பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் திருவண்ணாமலை பஸ் நிலையத்தை அடுத்த நினைவு தூண் ரவுண்டானா அருகில் 100-க்கும் மேற்பட்டோர் கூடினர். இதையடுத்து அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தபடி அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 6 பெண்கள் உள்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 8 பெண்கள் உள்பட 91 பேரை போலீசார் கைது செய்தனர்.

அறிவொளி பூங்கா அருகிலும், ரவுண்டானா அருகிலும் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story