போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் தொழில்நுட்பங்கள்!


போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் தொழில்நுட்பங்கள்!
x
தினத்தந்தி 7 July 2018 6:54 AM GMT (Updated: 7 July 2018 6:54 AM GMT)

நம் கண் முன்னாலேயே போக்குவரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து வசதிகள் அதிகரித்திருக்கின்றன, பயண நேரம் குறைந்திருக்கிறது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சரி, எதிர்காலத்தில் போக்குவரத்து எப்படியிருக்கும்? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், நான்கு தொழில்நுட்பங்கள்தான் எதிர்காலத்தில் மண், விண் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

அவர்கள் சொல்லும் அந்த 4 தொழில்நுட்பங்கள் பற்றி...

டிரைவர் இல்லாத கார்கள்: டிரைவர் இல்லாத வாகனங்களை உருவாக்குவதற்குப் பல நிறுவனங்கள் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களின்போது அமெரிக்க ராணுவம் இதுகுறித்து யோசிக்கத் தொடங்கியதாம். கண்ணிவெடி போன்றவற்றில் அமெரிக்கப் படையினர் இறப்பதையும், காயமடைவதையும் தடுக்கும் முயற்சியாக இது உருவாக்கப்பட்டது. ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்குவதற்கு, விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒரு போட்டியே நடத்தியது. அப்போது முதல் உபேர், ஜெனரல் மோட்டார்ஸ், கூகுள் போன்ற நிறுவனங்கள் டிரைவர் இல்லாத கார்களை உருவாக்கி வருகின்றன. இப்போதைக்கு இத்தொழில்நுட்பம் முழுமை பெறவில்லை, பாதுகாப்பு உத்தரவாதம் ஏற்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் உபேர் ஓட்டுநர் இல்லாத கார் மோதி 49 வயது பெண் பலியானார். இதனால் உபேர் நிறுவனம் இப்போதைக்கு இம்முயற்சியை நிறுத்திவைத்திருக்கிறது.



புதுப்பிக்கக்கூடிய பேட்டரி வாகனங்கள்: தற்போது உலகம் முழுக்கப் பரவலாக பேட்டரி வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு மின்சக்தி செலவு குறைவாகவும், அதிகம் பராமரிப்புத் தேவையின்றியும் இருப்பதால் விற்பனை இன்னும் அதிகமாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர். வழக்கமான கார்களை விட பேட்டரி கார்கள் சற்று விலை அதிகமானதாக இருக்கலாம். ஆனால் இவற்றுக்கான பேட்டரிகளின் விலை குறைந்து வருவதால், கார்களின் விலையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது பேட்டரி கார்கள் நீண்ட தூரம் செல்லுமா என்ற அச்சம் சில ஓட்டுநர்களுக்கு உள்ளது. ஆனால், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 300 மைல் தூரம் வரை பயணிக்கக்கூடிய பேட்டரி கார்கள் வந்துவிட்டன.



அதிவேக ரெயில்: சுமார் ஆயிரத்து 123 கி.மீ. வேகத்தில் ஒரு குழாயின் வழியாகச் சீறிப்பாயும் ‘ஹைப்பர்லூப்’ என்னும் அதிநவீன போக்குவரத்து யோசனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த யோசனையை முதன்முதலாக முன்வைத்தவர், உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகிய இரண்டு மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ள எலான் மஸ்க். காந்த விசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ‘மாக்லெவ்’ ரெயில் முறையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில், ரெயில்கள் ஒரு பெரும் குழாயின் வாயிலாக சுமார் ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாயும்.



விண்வெளிப் பயணம்: ‘பால்கன் ஹெவி’ என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் விண்ணில் ஏவியது. அப்போது அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு வண்ண காரே ராக்கெட்டில் பறந்து சென்றது. எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ், 2022-ல் செவ்வாய்க்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் ‘பயணிகளுக்கான’ கட்டணம்தான் எக்கச்சக்கமாக இருக்கும்! 

Next Story