‘ஆழ்துளை மீட்பு’க்கு ஓர் அதிசயக் கருவி!


‘ஆழ்துளை மீட்பு’க்கு ஓர் அதிசயக் கருவி!
x
தினத்தந்தி 7 July 2018 3:09 PM IST (Updated: 7 July 2018 3:11 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறிவிழுவதும், அவற்றை மீட்க நடக்கும் போராட்டமும், சமயங்களில் குழந்தைகளின் உயிரிழப்பும் தொடரும் சோகம்.

மதுராந்தகம் செண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள் அதை மாற்ற வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.

மெக்கானிக்கல் பிரிவு நிறைவாண்டு மாணவர்களான அவர்கள், ‘ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழும் குழந்தையை மீட்கும் சாதனத்தை’ உருவாக்கியிருக்கிறார்கள்.

அவர்களிடம் பேசுவோம்...

உங்களைப் பற்றி ஓர் அறிமுகம்...

முகமது ஆரிப், விசாகர், சந்தோஷ், விஜய் ஆகிய நாங்கள், மெக்கானிக்கல் பிரிவு நிறைவாண்டு மாணவர்கள். நிறைவாண்டு புராஜெக்டாக நாங்கள் உருவாக்கியதுதான், ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் சாதனம்.

இப்படிப்பட்ட ஒரு சாதனத்தை உருவாக்கத் தோன்றியது ஏன்?

நாம் மேலும் மேலும் நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில், எங்கும் கணக்கில்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல சமயங்களில், ஆழ்துளைக் கிணறு அமைப்போர், நில உரிமையாளர்களின் அலட்சியத்தால், ஆழ் துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுவதும் தொடர்கதையாக உள்ளது. மீட்பு முயற்சியின்போது குழந்தைகள் உயிரிழப்பது பெரும் துயரம். இந்த நிலையை மாற்றும் வகையில் ஒரு சாதனத்தை உருவாக்க முயற்சிக்கலாமா என்று நாங்கள் ஆலோசித்தோம். இந்த யோசனையை எங்கள் கல்லூரி முதல்வர் அப்துல் காதரிடமும் தெரிவித்தோம். அவர் அளித்த ஊக்கம், உதவியால் நாங்கள் இந்தக் கருவியை வெற்றிகரமாக செய்து முடித்தோம்.

இக்கருவி செயல்படும் விதம் பற்றிக் கூறுங்கள்..

இக்கருவியின் சட்டக அமைப்பை ஆழ்துளைக் கிணற்றின் மேற்புறத்தில் பொருத்த வேண்டும். அதில் உள்ள மோட்டாரை இயக்கினால், அது ஓர் உருளையைச் சுழற்றி, அதில் சுற்றப்பட்டிருக்கும் கயிற்றையும், அதில் இணைக்கப்பட்டிருக்கும் இரு மீட்புக் கரங்களையும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கும். மீட்புக்கரங்களுக்கு மேலாக ஒரு கேமராவும் எல்.இ.டி. விளக்கும் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றின் மூலம், குழந்தை இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியும். மீட்புக் கரங்களில் ஒன்று நிலையானதாகவும், மற்றொன்று நகரக்கூடியதாகவும் இருக்கும். அவற்றின் உதவியால் நெஞ்சு, முதுகுப்பகுதியில் குழந்தையைப் பற்றி, மோட்டாரால் உருளையை எதிர்ப்புறத்தில் சுழலச் செய்து மேலே தூக்க முடியும். இக் கரங்களில் ‘ஸ்பாஞ்ச்’ பொருத்தப்பட்டிருப்பதால், குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.



இந்த சாதனத்தில் கூடுதல் சிறப்பம்சம் ஏதும் உள்ளதா?

இச்சாதனத்தில் ஓர் ஆக்சிஜன் சென்சாரும் இணைக்கப்பட்டிருப்பதால், குழந்தையின் சுவாசத்தையும், அது சிக்கியுள்ள இடத்தில் ஆக்சிஜன் அளவையும் அறிய முடியும். ஒருவேளை அங்கு ஆக்சிஜன் குறைவாக இருந்தால், வெளியில் இருந்து தனியாக குழாய் வழியாக ஆக்சிஜனை செலுத்தி குழந்தையைக் காக்க முடியும்.

இக்கருவியைத் தயாரிக்க எவ்வளவு காலம் ஆனது, எங்கே தயாரித்தீர்கள்?

இக்கருவிக்கான திட்டமிடல், நிஜத்தில் உருவாக்குவது என 3 மாத காலம் ஆனது. எங்கள் கல்லூரியில், ‘ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்னொவேஷன் சென்டர்’ என்ற கண்டுபிடிப்பு மையம் உள்ளது. மாணவர் களின் கண்டுபிடிப்பு யோசனை களுக்கு ஊக்கம் தருவதும், தயாரிப்புக்கு உதவுவதும் இம்மையத்தின் நோக்கம். இந்த மையத்தின் மூலம், இதுவரை எங்கள் கல்லூரி மாணவர்கள் நூறுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நாங்களும் இம்மையத்தின் உதவியால், கல்லூரியிலேயே எங்கள் சாதனத்தை உருவாக்கி முடித்துவிட்டோம். இதில் இணைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சென்சாரை மட்டும் வெளியில் இருந்து வரவழைத்தோம்.

இந்தச் சாதனத்தின் எந்தப் பகுதியை உருவாக்குவது உங்களுக்கு சவாலாக இருந்தது?

இதன் கரங்களை உருவாக்குவதுதான். இக்கரங்கள், குழந்தையை நழுவாமல் நன்றாகப் பற்றித் தூக்க வேண்டும். அதேநேரம், குழந்தையை அளவுக்கு அதிகமாக இறுக்கிப் பிடித்துவிடக் கூடாது. இதை நாங்கள் மனதில் கொண்டு கவனமாக கரங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே இதற்கு மட்டும் எங்களுக்கு மூன்று வார காலம் பிடித்தது.

இந்தக் கருவியை உருவாக்கி முடித்ததும் உங்களுக்கு எப்படி இருந்தது?

மிகவும் நிறைவாக இருந்தது. இதற்கு உதவி செய்த எங்கள் கல்லூரி முதல்வர், துறைத் தலைவர் கணேசன், வழிகாட்டியான பேராசிரியர் முகமது இஸ்மாயில் ஆகியோருக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். இக்கருவி உருவாக்கத்துக்குத் தேவையான பணத்தை அளித்த எங்கள் குடும்பத்தினரையும் குறிப்பிட விரும்புகிறோம்.

இந்தக் கருவியை மேலும் மேம்படுத்த வழியுண்டா?

தற்போது இக்கருவியால் சுமார் 6 கிலோ எடை உடைய குழந்தையைத் தூக்க முடியும். இதில் கூடுதல் சக்தியுள்ள மோட்டாரைப் பயன்படுத்துவதன் மூலம், 8 கிலோ வரை எடையுள்ள குழந்தையை மீட்க முடியும். சிக்கிய குழந்தைக்குத் தெம்பூட்டும் வகையில் அதனுடன் பேசவும், அதன் குரலைக் கேட்கவும் ஒலிபெருக்கி, ஒலிவாங்கிகளையும், குழந்தை இருக்கும் இடத்தின் வெப்ப நிலையை அறிய அதற்கான சென்சாரை பொருத்தவும் முடியும். செலவைக் கருத்தில் கொண்டே தற்போது இவற்றை எங்கள் கருவியில் இணைக்கவில்லை.

ஏற்கனவே இதுபோன்ற சாதனங்கள் இருக்கின்றனவா?

ஏற்கனவே சிலர் இதுபோன்ற சாதனங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால் எங்கள் சாதனம் மிகவும் பாதுகாப்பானது, இதன் மூலம் நூறு சதவீதம் குழந்தையை மீட்க முடியும் என்று நாங்கள் உத்தரவாதமாகக் கூறுகிறோம்.

இப்படிப்பட்ட ஒரு கருவியை உருவாக்குவதற்கு உங்களுக்கு மிகவும் உந்துதலாக அமைந்தது எது?

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வி, குழந்தை இறந்தது என்று செய்தித்தாள்களில் பார்க்கும் செய்தி எங்களுக்கு வேதனை தரும். அது, நாங்கள் இச்சாதனத்தை உருவாக்குவதற்கு பிரதான காரணம். அப்புறம், சமீபத்தில் நாங்கள் பார்த்த, இச்சம்பவத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படமும் உந்துதலாக அமைந்தது.

அடுத்த திட்டம்...?

நாங்கள் முன்பு குறிப்பிட்ட மேம்பாடுகளுடன் இந்தச் சாதனத்தை உருவாக்க ஆசை. தகுதியானோர் உதவினால் அதை எங்களால் செய்ய முடியும், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை மரணம் என்று செய்தி வராமல் தடுக்க முடியும்.

இக்கருவியை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவானது?

மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் செலவானது. ஆனால் விலை மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் ஒரு கருவியின் உருவாக்கத்தில் இது ஒன்றும் பெரிய செலவு கிடையாதே!

நிஜம்தான்! 

Next Story