மாவட்ட செய்திகள்

பழைய நினைவுகளை அழிக்கும் கருவி! + "||" + Old memories removal tool

பழைய நினைவுகளை அழிக்கும் கருவி!

பழைய நினைவுகளை அழிக்கும் கருவி!
‘நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு மறக்கத் தெரியாதா?’ என சில நினைவுகளை நாம் மறக்க நினைக்கிறோம்.
நம் வாழ்வில் நாம் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய சில பிரிவுகள் போன்றவை நமது மூளையின் உட்பகுதியில் மிகவும் ஆழமாகப் பதிந்து நீங்காத பழைய நினைவுகளாக மீண்டும் மீண்டும் மேலெழுகின்றன, நமக்குப் பதற்றத்தையும் சோகத்தையும் துக்கத்தையும் தருகின்றன.


எண்ணி எண்ணி மகிழத்தக்க இன்பமான நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு, துன்ப நினைவுகளைத் துடைத்தெறிந்துவிட முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த முயற்சியில்தான் விஞ்ஞானம் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

நமக்குள் பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் பதிவுகள் மனித மூளையில் எந்தப் பகுதியில் சேமிக்கப்படுகின்றன என்ற ஆராய்ச்சியில் சுவிட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, நரம்பியல் சிகிச்சையால் பயத்தை மறக்கடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட எலிகளைப் பரிசோதித்தபோது, அவற்றுக்கு முன்பிருந்த அச்சவுணர்வு பெரிதும் குறைந்து காணப்பட்டது.

இதன்மூலம், மூளையின் ‘டென்டேட் கைரஸ்’ எனப்படும் நியூரான்களின் தொடர் செயல்பாட்டை மட்டுப்படுத்துவதன் வாயிலாக, நம்மை வாட்டி வதைக்கும் பழைய நினைவுகளில் இருந்தும், அவற்றின் தாக்கத்தில் இருந்தும் விடுதலை பெறலாம் என இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ஜோகன்னஸ் கிராப் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மறக்கடிக்கப்பட வேண்டிய பழைய நினைவுகளை அழிப்பதற்குத் தேவையான கருவியை உருவாக்கும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.