அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ரூ.58½ கோடியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்


அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ரூ.58½ கோடியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 July 2018 4:00 AM IST (Updated: 8 July 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ரூ.58 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியை அமைச்சர் பென்ஜமின் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


படப்பை,

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ரூ.58 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி காட்டாங்கொளத்தூர், குன்றத்தூர் மற்றும் பரங்கிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் முதல் வரதராஜபுரம், திருமுடிவாக்கம், இரண்டாம் கட்டளை, தரப்பாக்கம் ,கொளப்பாக்கம், பொழிச்சலூர் மற்றும் கவுல்பஜார் வரையிலான சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கரைகளில் இந்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் ஆற்றின் கரைகளில் படிந்துள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளுக்காக ரூ.1 கோடியே 34 லட்சமும், ஆற்றின் கரைகளை பலப்படுத்தி இருபுறங்களிலும் வெட்டிவேர் புல் பயிரிட ரூ.1 கோடியே 41 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


இந்தநிலையில் முதல் கட்டமாக அடையாறு ஆற்றின் கரையோரங்களில் தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பழனி, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பென்ஜமின், பூமி பூஜை செய்து தடுப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.சந்திரபாபு, பாஸ்கரன், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.டி.கற்பகம் சுந்தர், ஆதனூர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story