முதியவர் அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் பெண் கைது


முதியவர் அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் பெண் கைது
x
தினத்தந்தி 8 July 2018 4:30 AM IST (Updated: 8 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி அருகே முதியவரை அடித்துக்கொலை செய்த பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள குமரப்பன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 75). இவர் வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற பெருமாள் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் வீரகுமார் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை தேடிவந்தனர். இந்நிலையில் மணமேல்குடி அருகே உள்ள மேலஸ்தானம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு பெருமாள் தலையில் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் பெருமாளின் செல்போனை சோதனையிட்டதில், அத்தாணி அருகே உள்ள செல்லப்பிள்ளையார்கோவில் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் மனைவி மரகதம் (28) என்பவர் பெருமாளிடம் அதிக நேரம் பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மரகதத்தை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் மரகதம் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெருமாளை கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மரகதம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு:- நான் கடந்த 6 வருடமாக ஒவ்வொரு சந்தைக்கும் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். இதேபோல அறந்தாங்கி அருகே உள்ள அமரசிம்மேந்திரபுரம் பகுதியை சேர்ந்த மணிமுத்து (51) என்பவரும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதில் எனக்கும் மணிமுத்துவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந் நிலையில் நான் பெருமாளிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு பணம் கடனாக வாங்கி இருந்தேன். இந்த தொகையை அடிக்கடி கேட்டு பெருமாள் என்னை தொந்தரவு செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நானும், மணிமுத்துவும் சேர்ந்து பெருமாளை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். பின்னர் பெருமாளுக்கு போன் செய்து மேலஸ்தானம் கண்மாய்க்கு வர சொன்னோம். அதைத்தொடர்ந்து அங்கு வந்த பெருமாளை மணிமுத்துவும், நானும் சேர்ந்து கட்டையால் அடித்து கொன்றோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம் என கூறினார்.

இதையடுத்து போலீசார் மரகதம் மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிமுத்துவை கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முதியவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் வியாபாரி அடித்து கொலை கொலை செய்த சம்பவம் மணமேல்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story