குற்றாலத்தில் படகு சவாரியின் போது பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை
குற்றாலத்தில் படகு சவாரியின் போது பெண்களை கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி,
குற்றாலத்தில் படகு சவாரியின் போது பெண்களை கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
படகு குழாம்நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான படகு சவாரி கடந்த ஜூன் மாதம் 16–ந் தேதி தொடங்கியது.
படகு சவாரி குறித்து படகு குழாம் அலுவலர் அசோகன் கூறியதாவது:–
இந்த ஆண்டு படகு சவாரி தொடங்கியது முதல் தற்போது வரை சுமார் 6 ஆயிரம் பேர் சவாரி செய்துள்ளனர். நண்பர்களாகவும், குடும்பங்களாகவும் படகு சவாரி செய்து வருகின்றனர். புதுமண தம்பதிகளும் உற்சாகமாக படகு சவாரியில் ஈடுபடுகிறார்கள். படகில் சவாரி செய்பவர்கள் சில நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தாமாகவே படகை சவாரிக்காக எடுத்து செல்பவர்கள் முதலில் படகுகளை சரி பார்க்க வேண்டும். சவாரி செய்யும் போது நிற்கவோ, ஆடவோ கூடாது. ஒரு படகில் இருந்து மற்றொரு படகிற்கு தாவக்கூடாது. ஒரு படகில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை மட்டும் அனுமதிக்கப்படும்.
நடவடிக்கைபடகில் செல்பவர்களால் படகில் உள்ள உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதன் இழப்பீட்டு தொகையை அவர்கள்தான் செலுத்த வேண்டும். படகில் செல்பவர்கள் அடுத்த படகில் செல்லும் பெண்களை கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.