‘நீட்’ தேர்வு உள்பட மாணவர்களை பாதிக்கும் கல்வி திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரசாரம்


‘நீட்’ தேர்வு உள்பட மாணவர்களை பாதிக்கும் கல்வி திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரசாரம்
x
தினத்தந்தி 7 July 2018 11:00 PM GMT (Updated: 7 July 2018 7:44 PM GMT)

‘நீட்’ தேர்வு உள்பட மாணவர்களை பாதிக்கும் கல்வி திட்டங்களை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் மிகப்பெரிய அளவில் பிரசாரம் நடத்தப்படும் என்று கி.வீரமணி கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகளை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் இந்த மாநாட்டில் சில புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளோம்.

‘நீட்’ தேர்வை மாநில பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசு, மாநில அரசுகளை மரியாதைக்கு கூட கவனிப்பதில்லை. ‘நீட்’ தேர்வு தமிழகத்தை மட்டுமின்றி அனைத்து மாநிலத்திலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே ‘நீட்’ தேர்வு உள்பட கல்வித்துறையில் உள்ள மாணவர்களை பாதிக்கும் மற்ற திட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் மிகப்பெரிய பிரசாரம் நடைபெற உள்ளது.

ஒரு மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்றால் மட்டுமே அவருக்கு நிர்வாகத்தில் வேலை உண்டு. மாநிலத்தில் நெருக்கடி நிலை ஏற்படும்போது டெல்லிக்கு தகவல் கொடுப்பது மட்டும் அவருடைய வேலை. ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நிர்வாகத்தில் தலையிட்டு போட்டி அரசாங்கம் நடத்துவது அவருடைய வேலை அல்ல. எனக்கு அதிகாரம் உள்ளது என்று கவர்னர் கூறுவது மோசமான விஷயம்.

அரசியல் சட்டப்படி ஒவ்வொரு உத்தரவிலும் கவர்னர் ஆணைப்படி என வரும். ஆனால் நடைமுறையில் அது கவர்னரின் உத்தரவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் தான். தற்போது எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கவர்னர் தரப்பில் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியின் போது ஒருமுறைகூட துணைவேந்தர் நியமனம் கவர்னர் மாளிகையில் இருந்து வந்தது கிடையாது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல, அறிவிக்கப்படாத கவர்னரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் பா.ஜனதா தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில், மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அதைத்தான் தமிழகத்தில் இங்கு நடத்தி கொண்டிருக்கிறார்கள். நாம் நம் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் கொடுமைகளை விட மாநில அரசு அதனை நியாயப்படுத்தி வருவது தான் வேதனை அளிக்கிறது.

முட்டைக்குள்ளே புகுந்து ஊழல் முறைகேடு செய்துள்ளார்கள் என்றால் அவர்களை பாராட்ட வேண்டும். இதில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது கேவலமாக இருக்கிறது.

இந்த ஊழல் எல்லாம் சினிமாவிலும், நாடகத்திலும் நடப்பது போல் உள்ளது. இவர்களின் இந்த அறிவியல் பூர்வமான ஊழலை வைத்து மிகப்பெரிய நாவலே எழுதலாம். 8 வழி பசுமை சாலை திட்டம், பசுமை யாருக்கு? சுமை யாருக்கு? என்பது பசுமைவழிச்சாலையை போடுபவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலை ரெயில் மூலம் கும்பகோணம் வந்த கி.வீரமணிக்கு மாவட்ட தலைவர் கவுதமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story