மத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயம்: ரெயிலில் உடன் சென்ற நண்பரிடம் போலீசார் விசாரணை
மத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயமானது தொடர்பாக அவருடன் ரெயிலில் சென்ற 2 நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தென்திருப்பேரை,
மத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயமானது தொடர்பாக அவருடன் ரெயிலில் சென்ற 2 நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சப்–இன்ஸ்பெக்டர்தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் அண்ணாதுரை (வயது 36). இவர் மராட்டிய மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி தேவகனி (30). இவர்களுக்கு கனிக்ஷா (7) என்ற மகளும், நவீன் (4) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கனிக்ஷா, நவீன் ஆகியோர் படித்து வருகின்றனர். தேவகனியின் சொந்த ஊர், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஆகும்.
பணியிட மாற்றம்இந்த நிலையில் அண்ணாதுரையை பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்தனர். இதனால் அவர் கடந்த மாதம் 4–ந்தேதி தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் சண்டிகருக்கு பணிக்கு செல்வதற்காக, கடந்த மாதம் 29–ந்தேதி கன்னியாகுமரி– டெல்லி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில், நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அண்ணாதுரை ரெயிலில் சென்றபோது, 30–ந்தேதி வரையிலும் தன்னுடைய மனைவியுடன் செல்போனில் பேசினார். மறுநாள் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தன்னுடைய கணவரின் செல்போனில் சார்ஜ் குறைந்ததால், இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என்று தேவகனி கருதினார்.
போலீசில் புகார்இதற்கிடையே டெல்லி ரெயில் நிலையத்தில் அண்ணாதுரையின் பெட்டி கேட்பாரற்று கிடந்தது. இதனை கைப்பற்றிய டெல்லி போலீசார், அதில் இருந்த அண்ணாதுரையின் முகவரியை கண்டறிந்து, தேவகனிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகனி, இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர் இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடமும், சண்முகநாதன் எம்.எல்.ஏ.விடமும் முறையிட்டு, தன்னுடைய கணவரை கண்டுபிடித்து தருமாறு மனு வழங்கினார்.
தீவிர விசாரணைஇதையடுத்து போலீஸ் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அண்ணாதுரை சென்ற ரெயிலில், அவருடைய நண்பர்களான கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த குல்சர் அலி, அரிஹரன் ஆகியோரும் பயணம் செய்தது தெரியவந்தது. குல்சர் அலி, அரிஹரன் ஆகியோரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆனார்கள்.
இதையடுத்து போலீசார் குல்சர் அலியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் அரிஹரனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அரிஹரன் கூறுகையில், எனக்கு டெல்லியில் பணியிடம் ஒதுக்கப்பட்டதால், நான் அங்கு சென்று சேர்ந்தேன். அண்ணாதுரைக்கு சண்டிகருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டதால், அவர் மற்றொரு ரெயிலில் ஏறுவதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் காத்து இருந்தார். பின்னர் அவர் மாயமாகி உள்ளார். போலீசாரின் விசாரணைக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து உள்ளனர்.
ஏ.டி.எம். கார்டுஇதற்கிடையே அண்ணாதுரைக்கு பெங்களூரு பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த வங்கி ஏ.டி.எம். கார்டு மூலம் அண்ணாதுரையின் சேமிப்பு கணக்கில் இருந்து 7 நிமிடத்தில் 5 முறை பணம் எடுக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. எந்த ஏ.டி.எம்.மில் இருந்து, யார் மூலம் பணம் எடுக்கப்பட்டது? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அண்ணாதுரையுடன் ரெயிலில் பயணம் செய்த குல்சர் அலி, தற்போது எங்கு உள்ளார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.