உரிமம் உள்ள விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்க வேண்டும் வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்


உரிமம் உள்ள விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்க வேண்டும் வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 July 2018 11:00 PM GMT (Updated: 7 July 2018 8:00 PM GMT)

உரிமம் உள்ள விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கவேண்டும் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஆடி மாதத்தில் மழை வரும் என எதிர்பார்த்து விவசாயிகள் விதை நெல் வாங்கி விதைக்க உள்ளனர். விதை ஒரு உயிர் உள்ள பொருள். ஒரு நெல் மணியை விதைத்து பல நெல்மணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் விதைகளை நாம் மிகுந்த கவனமுடனும் விழி்ப்புணர்வுடனும் தேர்வு செய்வது ஒவ்வொரு விவசாயிகளின் கடமை ஆகும்.

அந்த வகையில் தேர்வு செய்யும் விதை நெல் தரமானதாக இருக்க வேண்டும். போலி விதைகள், தரமற்ற விதைகள், சுத்தமில்லாத விதைகளை தவிர்த்து நன்கு முளைப்புத் திறன் உள்ள விதைகளை மட்டுமே வாங்க வேண்டும். விதை விற்பனை உரிமம் உள்ள விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகள் வாங்க வேண்டும்.

எந்த விவரமும் இல்லாத மற்றும் சான்று அட்டைகள் இல்லாமல் மூடைகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகளுக்கு கட்டாயம் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் தங்கள் வசம் உள்ள விதைகளை அரசு விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து முளைப்புத் திறன் பரிசோதனை செய்த பிறகு விதைக்கலாம்.

இதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியிலும், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையிலும் என தலா ஒரு விதைப்பரிசோதனை நிலையம் உள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் நல்்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை விதைத்து அதிக லாபம் ஈட்டலாம். இந்த தகவலை விதை ஆய்வு துணை இயக்குனர் திருச்செந்தில் வாசன் தெரிவித்தார்.

Next Story