அருப்புக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்


அருப்புக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்
x
தினத்தந்தி 8 July 2018 4:00 AM IST (Updated: 8 July 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு பகுதி மக்களுக்கு வைகை அணை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற 40 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கொண்டு நகராட்சி நிர்வாகம் வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.

இந்த நிலையில் மழை இன்றி வைகை அணை வறண்டு விட்டதால் அங்கிருந்து கிடைக்கப் பெறும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப் பெறும் குடிநீர் சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தாமிரபரணியில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டதாலும், குழாய்கள் உடைப்பின் காரணமாகவும் அருப்புக்கோட்டை நகருக்கு வரும் குடிநீரில் அளவு குறைந்து விட்டது. இதனால் மாதம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை இருந்து வருகிறது. மேலும் மழை இன்றி கடும் வறட்சியால் வீடுகளில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள் அவ்வப்போது நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நகராட்சி அலுவலகத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக தினமும் காலிக்குடங்களை நீண்ட வரிசையில் வைத்துக் கொண்டு பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.


எனவே பொதுமக்களின் சிரமங்களை அறிந்து தாமிரபரணியில் இருந்து கூடுதல் தண்ணீரை பெறவும், குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்து குடிநீர் பற்றாக் குறையை போக்கிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story