மாவட்ட செய்திகள்

பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் சந்திப்பு: முன்னாள் பெண் எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் கைது + "||" + Meeting with farmers protesting against greenery: former woman MLA Including 14 arrested

பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் சந்திப்பு: முன்னாள் பெண் எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் கைது

பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் சந்திப்பு: முன்னாள் பெண் எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் கைது
8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை சந்தித்ததாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 14 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொம்மிடி,

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் தொடர்பாக, நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கோம்பூர், காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்ரோடு ஆகிய கிராமங்களில், இந்த திட்டத்தால், பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து, பாதிப்பு குறித்து கருத்துகேட்டனர். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சாமியாபுரம் கூட்ரோடு பகுதிக்கு, காரில் வந்தார்.


அப்போது, பாலபாரதியின் காரை தடுத்து நிறுத்திய பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, விவசாயிகளை சந்திக்க கூடாது என கூறினார். இதற்கு பதிலளித்த பாலபாரதி விவசாயிகளை சந்திக்க கூடாது என ஆணை உள்ளதா? எனக் கேட்டார். இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர், தனது உயர் அதிகாரியிடம் பேசி விட்டு, செல்போனை பாலபாரதியிடம், கொடுத்தார். அப்போது, பேசிய பாலபாரதி அனுமதி வாங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் நான் இருக்க மாட்டேன் எனக்கூறினார்.

இதையடுத்து, மதியம் கோட்டமேடு கிராமத்திற்கு வந்த பாலபாரதி உள்ளிட்ட 14 பேரை, 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அனுமதியின்றி சந்தித்ததாக கூறி, அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீசார், கைது செய்தனர். பின்னர் போலீசார், அவர்களை ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு, நிருபர்களிடம் பாலபாரதி கூறியதாவது:- சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலம், வீடு, அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு, நிலத்தை கையகப்படுத்த, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், நோட்டீஸ் அனுப்பாததுடன், மக்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை.

விவசாயிகளையும், விளை நிலங்களையும் பாதிக்காமல், மாற்று வழியில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உரிய கால அவகாசம் வழங்கி, விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும். நில அளவீடு செய்யும் போது, தனியார் ஆலைகள், நிறுவனங்கள் பாதிக்கப்படாமல், அளவீடு செய்துள்ளனர். 8 வழி பசுமைச்சாலையால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்க விடாமல், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்று, ஆட்சியாளர்களும், போலீசாரும் நடந்து கொள்கின்றனர். இது ஜனநாயக விரோத செயலாகும். 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளை ஒன்று திரட்டி போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை சந்தித்ததாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. உள்பட 14 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட பாலபாரதி உள்ளிட்ட 14 பேரையும் போலீசார் இரவு விடுவித்தனர்.