போராட்டத்தின்போது கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போராட்டத்தின்போது கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 8:45 PM GMT)

8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தின்போது கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மல்லையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் பிரவீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, சிசுபாலன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சேலம்-சென்னை இடையேயான 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியதால் சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாய சங்க தலைவர்கள் சண்முகம், ரவீந்திரன் மற்றும் விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் நடத்தப்படும் போராட்டங்களை முடக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் வட்ட செயலாளர்கள் கந்தசாமி, குப்புசாமி, வெள்ளியங்கிரி, சின்னசாமி, சிவா, மாதையன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

8 வழி பசுமைச்சாலை தொடர்பாக பொதுமக்களிடம் குறை கேட்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் பெண் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்ய வலியுறுத்தியும் அரூர் ரவுண்டானாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டு விட்டு சென்றனர். இதில் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் முத்து, சின்னராசு, மாது, குமார், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story