இந்த மாத இறுதிக்குள் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ரூ.480 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
தமிழகத்தில் ரூ.480 கோடி மதிப்பில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், மூலனூர், குண்டடம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தாராபுரம் புதிய கல்வி மாவட்ட அலுவலகம் அரசு சார்பில் உருவாக்கப்பட்டது. அதற்கான கல்வி மாவட்ட அலுவலகம் தாராபுரம் பைவ் கார்னர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டது. இந்த புதிய கல்வி மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.
விழாவில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கல்வெட்டை திறந்துவைத்தார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
தமிழகத்தில் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே இருந்த 68 கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 120 கல்வி மாவட்டங்களாக உயர்த்தப்பட்டு உள்ளன. மேலும் அங்கு பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஒவ்வொருவரும் 35 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். அத்துடன் அவர்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.
இதன் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வித்தரம், பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிடம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். பின்னர் அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அது விரைவில் சரிசெய்யப்படும். மேலும் அரசு பள்ளிகளில் உள்ள பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களில் ஏற்பட்டுள்ள தொய்வுகளை கண்டறிந்து சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றம் செய்யப்படும். இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களும் தோற்றமளிப்பார்கள்.
விரைவில் 3 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 9-ம்வகுப்பு முதல் பிளஸ்-1 வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இணைய தள கல்வி கற்பிக்கப்படும். மேலும் அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இதைத்தொடர்ந்து உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2017-2018-ம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 216 பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,687 ஆசிரியர்கள், 21 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற 6 ஆசிரியர்கள், 100 சதவீதம் வருகை புரிந்த 3 ஆசிரியர்கள் என மொத்தம் 1,933 ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 500 பட்டய கணக்காளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயனடைவார்கள். மேலும் பிளஸ்-2 வகுப்பு முடித்தவுடன் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் மாற்று சான்றிதழ் (டி.சி) கொடுத்து வெளியில் அனுப்பி விடுகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டியது உள்ளது.
ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் வகையில் ‘பயோ மெட்ரிக்’ முறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ரூ.480 கோடி மதிப்பில் இந்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்திற்கு மத்திய மனிதவளத்துறை மந்திரி வந்த போது கல்வித்துறையில் தமிழ்நாட்டை பின்பற்றப்போகிறோம் என்று பாராட்டினார். இந்த அரசு வெளிப்படை தன்மையுடன் செயலாற்றி வருகிறது. புதிய பாடத்திட்டம் வரலாறு படைத்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அங்கன்வாடி மையத்தில் 4 வயது முடிந்த குழந்தைகளை நேரடியாக பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் பள்ளிகல்வியில் 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள். அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளை அங்கிருந்து பள்ளிக்கு அனுப்பும் போது சிலர் தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். அந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஏழை எளிய மக்களே இல்லாத வகையில் அவர்களது வாழ்க்கைதரம் உயர வேண்டும் என்பதற்காக விஷன் 2023 என்ற திட்டத்தை மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பள்ளி கல்வித்துறைக்காக அதிக நிதி ஒதுக்கி தரப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25 கோடி செலவில் 38 ஆயிரத்து 500 பேருக்கு கோழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சப்- கலெக்டர் கிரேஸ் பச்சாவு, எம்.எல்.ஏ.க்கள் வி.எஸ்.காளிமுத்து (தாரா புரம்), தனியரசு(காங்கேயம்), கே.என்.விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன்(பல்லடம்), கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார், தாராபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சின்னப்பன் என்கிற பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ரமேஷ், செந்தில் குமார், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story