பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் ‘ஹம்சாபர்’ எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது


பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் ‘ஹம்சாபர்’ எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது
x
தினத்தந்தி 8 July 2018 4:30 AM IST (Updated: 8 July 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் ‘ஹம்சாபர்‘ எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

நாகர்கோவில்,

மத்திய அரசு, கடந்த ஆண்டு வெளியிட்ட ரெயில்கால அட்டவணையில் குஜராத் மாநிலம் காந்திதாமில் இருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு முழுவதும் குளிர்சாதன பெட்டியுடன் கூடிய ‘ஹம்சாபர்‘ வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி வாரத்தின் திங்கட்கிழமை மதியம் 1.50 மணிக்கு காந்திதாமில் இருந்து புறப்படும் இந்த ரெயில் அகமதாபாத், வதோதரா, சூரத், பன்வேல், வசாய்ரோடு, ரத்னகிரி, மட்காவ், கார்வார், மங்களூரு, கோழிக்கோடு, ஷொரனூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக புதன்கிழமை காலை 11.30 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சனிக்கிழமை காலை 4.40 மணிக்கு சென்று சேரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஹம்சாபர் ரெயில் முக்கியமான ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இது குமரி மாவட்ட ரெயில் பயணிகளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

‘ஹம்சாபர்‘ சிறப்பு ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாத நிலை ஏற்பட்டதால், குமரி மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்திலோ அல்லது திருநெல்வேலியிலோ இறங்கி பஸ் மூலம் சொந்த ஊர் வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இது குமரி மாவட்ட பயணிகளுக்கு வீண் அலைச்சலையும், பண விரயத்தையும் ஏற்படுத்தும். எனவே, பயணிகள் நலன் கருதி ஹம்சாபர் ரெயிலை நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என குமரி மாவட்ட ரெயில் பயணிகள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இதுதொடர்பாக மத்திய ரெயில்வே துறை மந்திரியுடன் பேசினார். அதன் பயனாக, ஹம்சாபர் ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காந்திதாம்-திருநெல்வேலி ‘ஹம்சாபர்‘ எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரியை தொடர்பு கொண்டு பேசினேன். அதன் பயனாக ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், ஹம்சாபர் சிறப்பு ரெயில் தொடக்க விழா கடந்த 5-ந் தேதி குஜராத் மாநிலம் காந்திதாமில் நடந்தது. இந்த ரெயில் நேற்று காலை 10.35 மணி அளவில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. ரெயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

முழுவதும் குளிரூட்டப்பட்ட 19 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்த்தலாவில் உள்ள ரெயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் ஜெர்மனி நாட்டு தொழில்நுட்பத்தின் படி தயாரிக்கப்படும் நவீன எல்.எச்.பி. பெட்டிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்டியின் வேகம், ரெயில் நிலையம் போன்றவற்றை குறித்து பயணிகள் அறிந்து கொள்ள ஏதுவாக எல்.இ.டி. திரை அறிவிப்பு வசதி உள்ளது.

மேலும், சொகுசு படுக்கை வசதி, பயோ-டாய்லெட், கண்காணிப்பு கேமராக்கள், எச்சரிக்கை மணி போன்றவைகளும் பயணிகளுக்கு டீ, காபி, பால் வழங்கும் எந்திரம், உணவுபொருட்கள் கெட்டுபோகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்சாதன பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. 

Next Story