விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மைசூரு கல்லூரி மாணவியின் இதயம் தானம் பெங்களூரு இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது


விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மைசூரு கல்லூரி மாணவியின் இதயம் தானம் பெங்களூரு இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 8 July 2018 4:30 AM IST (Updated: 8 July 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மைசூரு கல்லூரி மாணவியின் இதயம் தானமாக பெறப்பட்டு, ஆம்புலன்சில் எடுத்துவரப்பட்டு பெங்களூரு இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

மைசூரு,

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மைசூரு கல்லூரி மாணவியின் இதயம் தானமாக பெறப்பட்டு, ஆம்புலன்சில் எடுத்துவரப்பட்டு பெங்களூரு இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவி

மைசூரு டவுனை சேர்ந்தவர் நமனா (வயது 21). இவர் மைசூருவில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவருடன் படித்து வந்தவர் மாணவர் அரவிந்த் ராவ் (21). இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி அரவிந்த் ராவுடன் மோட்டார் சைக்கிளில் நமனா மைசூரு அருகே உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு இருவரும் மைசூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மைசூரு மணிக்கூண்டு அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரவிந்த்ராவ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி நமனா படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மைசூரு குவெம்பு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயம் தானம்

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுபற்றி டாக்டர்கள் நமனாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெங்களூரு அருகே கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு இதயம் தானமாக தேவைப்பட்டது பற்றி டாக்டர்கள் நமனாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து அவர்கள், நமனாவின் இதயத்தை தானமாக வழங்க முன்வந்தனர். இதைதொடர்ந்து நமனாவின் இதயம், தானமாக பெறப்பட்டது. பின்னர் இதயம் குளிர்பதன பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டு ஆம்புலன்சு வாகனம் மூலம் சுமார் 133 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கெங்கேரி தனியார் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மற்ற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இதயம் எடுத்துவரப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஆம்புலன்சு வாகனம் மைசூருவில் பகல் 12 மணிக்கு புறப்பட்டு கெங்கேரிக்கு மதியம் 1.47 மணிக்கு வந்தடைந்தது.

2 பேருக்கு மறுவாழ்வு

பின்னர் அந்த இதயம், கெங்கேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணுக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினர். அதுபோல் நமனாவின் சிறுநீரகமும் தானமாக பெறப்பட்டு பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவி நமனா 2 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார்.


Next Story