தாவூத் இப்ராகிம் கூட்டாளியின் வீட்டில் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது


தாவூத் இப்ராகிம் கூட்டாளியின் வீட்டில் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2018 5:00 AM IST (Updated: 8 July 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஏ.கே. 56 ரக துப்பாக்கி உள்பட 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தானே, ஜூலை.8-

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஏ.கே. 56 ரக துப்பாக்கி உள்பட 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள்

தானே சாகேட் ரோடு ராபோடி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற கடைக்காரர்கள் ஜாகித், சஞ்சய் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்களிடம் இருந்து 10 கிராம் கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான நயீம் கானின் வீட்டில் அதிகளவு போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

பெண் கைது

இதையடுத்து போலீசார் கோரேகாவில் உள்ள நயீம் கானின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஏ.கே. 56 ரக துப்பாக்கி, 2 துப்பாக்கிகள் மற்றும் 103 தோட்டாக்கள் இருந்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நயீம் கான் தற்போது கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நயீம் கானின் மனைவி யாஸ்மினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நயீம் கானுக்கு ஆயுதங்கள் எப்படி கிடைத்தது? எதற்காக ஆயுதங்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story