ரூ.34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்ததில் மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சி முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி


ரூ.34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்ததில் மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சி முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 7 July 2018 10:30 PM GMT (Updated: 7 July 2018 11:15 PM GMT)

ரூ.34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி விவகாரத்தில் மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சிப்பதாக முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

ரூ.34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி விவகாரத்தில் மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சிப்பதாக முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று முதல்–மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

7 மாவட்டங்களில் தொழிற்சாலை

கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பதை பற்றி மட்டும் பெரிதாக பேசுகிறார்கள். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. பட்ஜெட்டில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க 7 மாவட்டங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுவது குறித்து அறிவித்துள்ளேன். தொலைநோக்குடன் பல திட்டங்களை அறிவித்துள்ளேன்.

விவசாயிகள் கடன் ரூ.34 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும். அதற்கான எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். ஹாசன், ராமநகர், மண்டியா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் பயன்பெறும் வகையில் கடன் தள்ளுபடி செய்திருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். குறிப்பாக ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பட்ஜெட்டில் அதிக சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

கர்நாடகத்தின் வளர்ச்சி மட்டுமே...

நான் ஒரு சாதிக்கான முதல்–மந்திரி அல்ல. நான் விவசாயிகளுக்கான முதல்–மந்திரி. ரூ.34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதில் அதிக பயன்பெறுவது பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா மாவட்டங்கள் ஆகும். பெலகாவி மாவட்டத்தில் ரூ.4,700 கோடியும், பாகல்கோட்டையில் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். மண்டியா மாவட்டத்தை சேர்ந்த பொறுத்த வரை ரூ.1,500 கோடி தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது வடகர்நாடக மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று எப்படி சொல்ல முடியும்.

கலபுரகி, பீதர், சித்ரதுர்கா, கொப்பல் மாவட்டங்களில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளேன். எந்த ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை. வடகர்நாடகம், தென்கர்நாடகம் என்ற பாகுபாட்டை நான் பார்ப்பது கிடையாது. கர்நாடகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி மட்டுமே எனது குறிக்கோள். அதனை கவனத்தில் கொண்டு தான் பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்துள்ளேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடர்கிறது.

மக்களை திசை திருப்ப முயற்சி

ரூ.34 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ததில் விவசாயிகள் மற்றும் மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சிக்கிறது. விவசாயிகளை காப்பாற்றவே கடனை தள்ளுபடி செய்தேன். விவசாயிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். ரூ.34 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து, கொள்ளையர்களிடம் கொடுக்கவில்லை. விவசாயிகளிடம் தான் கொடுத்துள்ளேன். அந்த பணத்தை எனது வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் பரப்பப்படும் தவறான தகவல்களை விவசாயிகள் நம்ப வேண்டாம். கடனை தள்ளுபடி செய்த பின்பும் விவசாயிகள் தற்கொலை செய்வது வேதனை அளிக்கிறது.

அதனால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வர வேண்டாம் என்று கைகளை கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இன்னும் 4 நாட்கள் மட்டும் பொறுமையாக இருங்கள். பட்ஜெட் மீது குறை கூறுபவர்களுக்கு விதானசவுதாவில் தக்க பதிலளிப்பேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். பா.ஜனதாவினருக்கு குற்றச்சாட்டு கூறுவது தவற வேறு இல்லை. பட்ஜெட் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாமல் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். பா.ஜனதாவினர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறு என்பதை ஆதாரங்களை வெளியிட்டு விதானசவுதாவில் தகுந்த பதிலளிப்பேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story