மும்பை அருகே நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணி பலி; 12 பேர் பரிதவிப்பு 100 பேர் பத்திரமாக மீட்பு
மும்பை சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வசாயில் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.
மும்பை,
மும்பை சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வசாயில் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 12 பேர் பரிதவித்து வருகிறார்கள்.
பலத்த மழை
மும்பையில் கடந்த 2, 3-ந் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மும்பையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதில் நேற்று காலையும் நகரின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக மலாடு, காந்திவிலி, போரிவிலி, பவாய், பாண்டுப், குர்லா, காட்கோபர் போன்ற மும்பையின் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
ரெயில்சேவை பாதிப்பு
இதேபோல நேற்று தானே, கல்யாண், டோம்பிவிலி, பத்லாப்பூர், அம்பர்நாத், பிவண்டி, வசாய், விரார், பால்கர் மற்றும் நவிமும்பையிலும் பலத்த மழை பெய்தது. கல்யாணில் பெய்த பலத்த மழையால் கல்யாண், விட்டல்வாடி ரெயில்நிலையங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. அங்குள்ள தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் கல்யாண்- கர்ஜத் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
அந்த வழியாக வர இருந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பன்வெல் வழியாக மும்பை வந்தன.
போக்குவரத்து பாதிப்பு
அம்பர்நாத் பி.கெபின் ரோட்டை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பை- புனே நெடுஞ்சாலையில் காலாப்பூர் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் அந்த ரோட்டில் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. கல்யாண், பிவண்டி பகுதியில் உள்ள மும்பை- நாசிக் நெடுஞ்சாலையில் வெள்ளநீர் தேங்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராய்காட் மாவட்டம் மகாட்டில் சாவித்திரி நதி பாலத்தை தொட்டபடி வெள்ளநீர் ஓடியது. எனவே அந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராய்காட்டில் இருந்து மும்பை நோக்கி வந்த வாகனங்கள் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
10 அடி உயரத்திற்கு வெள்ளம்
பலத்த மழையால் உல்லாஸ்நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே பத்லாப்பூர் உல்லாஸ்நதி பாலத்தில் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. டிட்வாலா அருகே கடோலி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் 10 அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் கட்டிடங்களின் மாடிக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு துங்காரேஷ்வர் பறவைகள் சரணாலயம் பகுதியில் சுற்றுலா தலமான சிஞ்சோட்டி நீர்வீழ்ச்சி உள்ளது. இப்பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் அருவியாக கொட்டுவதால் இதனை காண மும்பை, தானே, நவிமும்பை பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வருகை தருவது வழக்கம். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் மும்பை, வசாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலை அங்கு சுற்றுலா வந்தனர்.
அப்போது பெய்த கனமழையால் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அங்கிருந்தவர்களில் பலர் உடனடியாக வெளியேறினர்.
சுற்றுலா பயணி பலி
மேலும் பலர் வெளியேற முடியாமல் தவித்தனர். இதில் சுற்றுலா பயணி ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே தகவல் அறிந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சிக்கியிருந்த 100-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும் மேலும் 12 பேர் அங்கு சிக்கி பரிதவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கோலாப்பூர்
கோலாப்பூர் மாவட்டம் இச்சல்கரன்சியில் பெய்த பலத்த மழையால் சுமார் 30 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. ரத்னகிரியில் பெய்த பலத்த மழையால் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story