திகைக்க வைக்கும் தேனீ வருமானம்


திகைக்க வைக்கும் தேனீ வருமானம்
x
தினத்தந்தி 8 July 2018 10:24 AM GMT (Updated: 8 July 2018 10:24 AM GMT)

பெண் ஒருவர் தற்போது தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருடத்திற்கு 7 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்.

எம்.பி.ஏ மற்றும் பார்மசி படிப்புகளை படித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் தற்போது தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருடத்திற்கு 7 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெயர் பிரஜக்தா அட்மானே. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள காட்ஜிரோலி பகுதியை சேர்ந்தவர்.

பழங்குடியினத்தை சேர்ந்தவரான பிரஜக்தா நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் பள்ளி பருவம் முதலே உறுதியாக இருந்திருக்கிறார். அதன்படியே படிப்பில் தீவிர ஆர்வம் காட்டி எம்.பி.ஏ. மற்றும் பார்மசி பட்டங்களை பெற்று புனேவில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார். எனினும் இயற்கையின் நிழலாக அடர்ந்த வனப்பகுதியில் வாழ்ந்து பழகியவருக்கு நகர வாழ்க்கை மீதும், வேலை மீதும் பிடிப்பு ஏற்படவில்லை. சொந்த ஊரிலேயே ஏதாவது ஒரு தொழிலை செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார். அவரது வசிப்பிடத்தின் அருகில் உள்ள வனப்பகுதியின் அழகிய தோற்றமும் அங்கு பூத்து குலுங்கும் மலர்களின் வாசமும், அதில் அமர்ந்து தேன் எடுக்கும் தேனீக்களின் ரீங்காரமும் அவருடைய தொழிலுக்கு முதலீடாக அமைந்துவிட்டன. தேனீ வளர்பாளராகும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

‘‘தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதுதான் நான் வசிக்கும் பகுதிக்கு ஏற்ற பொருத்தமான தொழிலாக தெரிந்தது. அதனால் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதற்கு முன்பு சில ஆராய்ச்சிகளை செய்தேன். அதற்கான தொழில் சார்ந்த பயிற்சிகளை பெற்றால்தான் லாபம் ஈட்ட முடியும் என்பதை உணர்ந்தேன். தேசிய தேனீ வாரியத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள தேனீ வளர்ப்பவர்களுடன் தொடர்பு கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வியாபார நுணுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொண்டேன்’’ என்கிறார்.

தற்போது பிரஜக்தா 50 தேனீ பெட்டிகள் மூலம் தேன் தயாரிக்கிறார். அந்த வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் மலர்களில் இருந்தும் பிரத்யேகமாக தேன் எடுக்கிறார். வெறுமனே கலவை தேனாக அல்லாமல் யூகலிப்டஸ், சூரியகாந்தி, லிச்சி, துளசி, பெர்ரி, எள் என தனித்தனியாக தேன்களை பிரித்தெடுத்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘ஒவ்வொரு தேன் வகையும் ஒவ்வொரு விதத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கின்றன. பெர்ரி தேன், நீரழிவு நோயை எதிர்த்து போராட உதவும். எள் தேன் இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். சளி, இருமல் பிரச்சினை களுக்கு யூகலிப்டஸ் தேன் நிவாரணம் தரும்’’ என்கிறார்.

பிரஜக்தா தேன் பாட்டிலுக்கு ரூ.30 முதல் ரூ.380 வரை விலை நிர்ணயித் திருக்கிறார். தேன் மெழுகு மூலமும் நல்ல வருமானம் ஈட்டுகிறார். இவர் கிராம பெண் களுக்கு தேனீ வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறார்.

"தேனீ வளர்ப்பில் பெண்களின் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களை ஈடுபடுத்த முயற்சி செய்து வருகிறேன்’’ என்கிறார். 

Next Story