அழகு தரும் ஆனந்தம்


அழகு தரும் ஆனந்தம்
x
தினத்தந்தி 8 July 2018 4:33 PM IST (Updated: 8 July 2018 4:33 PM IST)
t-max-icont-min-icon

அழகு நிலையங்கள் அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருவதாக இன்றைய பெண்கள் சொல்கிறார்கள். அழகோடு அவர்களுக்கு அங்கே ஆரோக்கியமும் கிடைக்கிறதாம்.

அழகு நிலையங்களைப் பற்றி சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அழகு நிலையங்கள் அவசியம் தேவை என்றே பெண்களில் பலரும் கருதுகிறார்கள்.

இயற்கையான அழகோடு திகழ்ந்தாலும், முகத்திற்கு பிளீச் செய்து கொள்ளவும், புதிய கூந்தல் அலங்காரத்திற்கு மாறவும், சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் அழகு நிலையத்தை பெண்கள் தேடிச் செல்கிறார்கள். பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும்போது, பார்த்தவுடன் ஓகே சொல்லும் விதத்தில் ‘மேக்அப்’ செய்யவும் நம்பிக்கையான அழகு நிலையங்களை தேடிப்போகிறார்கள்.

வருடம் முழுவதும் மார்டன் டிரஸ் போட்டு பழகிவிட்ட பெண்களுக்கு, பட்டுப்புடவை கட்டத் தெரிவதில்லை. சொந்தக்காரர்களிடம் கேட்டால்கூட ஒன்றிரண்டு மாடல்களில் உடுத்தத்தான் கற்றுத் தருவார்கள். அழகு நிலையம் சென்றால், ஈசியாக பத்து விதங்களில் புடவைகட்ட கற்றுத் தருகிறார்கள். ஐந்தே நிமிடத்தில் ஜவுளிக் கடை பொம்மை போல நிற்க வைத்து புடவை கட்டி விடுவதில் அழகுக் கலைஞர் களின் நேர்த்தி தெரியும்.

இளமை கூந்தலில்தான் குடிகொண்டிருக்கிறது என்று நினைக்கிறவர்கள், ஆங்காங்கே தெரியும் வெள்ளை முடியையும் கறுப்பாக்கி ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறார்கள். நடுத்தர வயதினருக்கு கறுப்பு ‘டை’ கைகொடுக்கிறது என்றால், இளம் பருவத்தினருக்கோ ‘கலரிங்’ மகிழ்ச்சி தருகிறது. தங்கள் கூந்தலுக்கு விதவிதமாக கலர் பூசி மகிழ்கிறார்கள்.

அழகு நிலையத்திற்கு செல்லும் பெண்களை விமர்சித்த ஆண்களும் இப்போது அழகு நிலையங்களை தேடிக் கிளம்பிவிட்டார்கள். பெண்கள் எதற்கெல்லாம் அழகு நிலையங்கள் செல்கிறார்களோ அதற்கெல்லாம் ஆண்களும் செல்கிறார்கள். பொலிவிழந்துபோய் அழகு நிலையத்திற்குள் நுழையும் ஆண்கள், ஜொலிப்போடு வெளியே வருகிறார்கள்.

சுற்றுச் சூழல் மாசுவால் தோலில் ஏற்படும் மாற்றங்கள், தலைமுடியில் ஏற்படும் மாற்றங்கள், தூக்கமின்மையால் முகத்தில் தெரியும் சோர்வு போன்றவை மனிதர்களுக்கு உற்சாகமின்மையை உரு வாக்குகிறது. அதனால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்ந்துபோய்விடுகிறது. தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை தோல்வியை சென்றடையும். அதனால் ஆண்களும், பெண்களும் அழகு நிலையங்களை நம்புகிறார்கள். அங்கே புறத்தை அழகுபடுத்தி, அகத்திலும் தன்னம்பிக்கையை தூக்கி நிறுத்துகிறார்கள்.

‘அழகிற்கும், வெற்றிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’ என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் மனோதத்துவ நிபுணர்களின் கணிப்பு, ‘அழகுக்கும், வெற்றிக்கும் தொடர்பு இருக்கிறது’ என்று சொல்கிறது. அழகு குறையும்போது ஒருவித தாழ்வு மனப்பான்மை தானாக வந்துவிடுகிறது. அதை எதிர்கொண்டு உற்சாகமாக செயல்பட பலராலும் முடிவதில்லை. அழகு மனிதர்களின் மனதிற்குள் நம்பிக்கை விதையை விதைக்கிறது. அந்த நம்பிக்கை விதை வளர்ந்து பெரும்பாலும் வெற்றியைத் தருகிறது.

‘அக அழகு போதும். முக அழகு தேவையில்லை’ என்று சிலர் சொல்வார்கள். அக அழகு யாருக்கும் புலப்படாது. ஒருவரைப் பார்க்கும் போது அவர்களுடைய புற அழகுதான் முதலில் அனைவரையும் வசீகரிக்கும். அதனால் புற அழகு முதல் தேவையாக அமைகிறது.

அழகு விஷயத்தில் இந்தக்கால மனிதர் களுக்கும், அந்தக்கால அரசர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அந்தக்கால அரசர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் தங்கள் இருப்பிடத்திலே அழகுகலை நிபுணர்களை வைத் திருந்தார்கள். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை தலையாய வேலையாகவும் அவர்கள் கருதினார்கள். அழகு அவர்களை மக்கள் மத்தியில் கவுரவப்படுத்தியது. மைசூர் மகாராஜா தசரா கொண்டாடும் பத்து நாளும் விதவிதமாக தன்னை அலங்கரித்து வீதி உலா வருவாராம். வீரம் மட்டுமல்ல, அழகும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

போட்டி நிறைந்த இன்றைய உலகில் தூக்கத்தை தொலைத்துவிட்டு, ஓய்வை தொலைத்துவிட்டு எல்லோரும் பணத்தையும், பதவியையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை. போதுமான உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. அதனால் இளம் வயதிலே முதுமையாக ஒருபகுதியினர் காட்சியளிக்கிறார்கள். அதை மறைக்க வேண்டும் என்ற நோக்கம் எல்லோரிடமும் இருக்கிறது. மறைக்க முடியாவிட்டால் அவர்கள் மனதொடிந்து போவார்கள். அப்படிப்பட்டவர்களை சரிசெய்து தன்னம்பிக்கையூட்டும் மையங்களாகவும் அழகு நிலையங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய அழகு நிலையங்கள் அழகோடு நின்றுவிடாமல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. உள்ளே உடற்பயிற்சி நிலையங்களையும் அமைத்து, உடல் நலத்தையும் பேணுகிறது. உடல் ஆரோக்கியம் ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் உடன்வரக் கூடியது. ஆயுளையும் அதிகரிக்கக்கூடியது. அழகு நிலையங்கள் ஆரோக்கிய நிலையங் களாகவும் மாறிவிட்ட பின்பு அதற்கு கிடைக்கும் மவுசும் அதிகரித்துவிட்டது.

அழகு நிலையங்களுக்கு பெண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று கொண்டிருந்த காலத்தில், அதை ஒரு குறையாகக் கூறி ஆண்கள் முணுமுணுத்தார்கள். இப்போது ஆண்களும் அழகு நிலையத்தை நோக்கிச் சென்று பெண் களோடு போட்டி போட்டு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதால் அழகு நிலையம் என்பது அத்தியாவசிய நிலையமாக மாறிக் கொண்டிருக்கிறது. 

Next Story