மாவட்ட செய்திகள்

உஷாரய்யா உஷாரு.. + "||" + Usharayya Usharoo ..

உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..
அவள் மூன்று குழந்தைகளின் தாய். கணவர் பொறுப்பற்றவர். அவள் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார்.
அவள் மூன்று குழந்தைகளின் தாய். கணவர் பொறுப்பற்றவர். அவள் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததும், அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையை பார்த்துவிட்டு ‘வேலைக்கு போகிறேன்’ என்று கூறிவிட்டு அப்படியே போனவர்தான், நாலாண்டுகள் ஆகியும் திரும்பிவரவில்லை. குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு சில வீடுகளில் வேலை செய்தாள். வீடுகளில் வேலைபார்ப்பது அவளுக்கு சில அசவுகரியங்களை ஏற்படுத்த, அடுத்து என்ன செய்வது? என்ற கேள்வியோடு அவள் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தான், அந்த நடு்த்தர வயது பெண் அவளுக்கு அறிமுகமானாள். அவள், குறிப்பிட்டதொரு மதம் சார்ந்த அடையாளத்தோடு முதலில் அவளை அணுகினாள். ‘கஷ்டங்கள் விரைவாக கடந்துபோய்விடும்’ என்று வாக்குறுதி கொடுத்து நட்பை வளர்த்தாள்.


அவ்வப்போது பண உதவி செய்து, அவளிடம் நெருக்கத்தை உருவாக்கிவிட்டு ஒருநாள் ‘உனக்கு எளிதானதொரு வேலையை கற்றுத்தருகிறேன். அதன் மூலம் நீ நிறைய சம்பாதித்து, வசதியாக வாழலாம்..’ என்றாள், அந்த நடுத்தர வயதுப் பெண்.

இவளும் சரி என்று சொல்ல, இரண்டொரு நாட்கள் கடந்ததும் அவளை தனது வீட்டிற்கு அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு அழைத்துச்சென்றாள். அங்கே கூந்தல் வெட்டப்பட்டு மாடர்ன் ‘ேஹர் ஸ்டைலுக்கு’ அவள் மாற்றப்பட்டாள். அவள் முக அழகும் மெருகேற்றப்பட்டது. பின்பு அவளை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, விலை உயர்ந்த ஆடையை உடுத்தவைத்தாள். வைரத் தோடுகளை காதுகளில் மாட்டிவிட்டு, தங்க நகைகளையும் கழுத்தில் அணியச்செய்தாள்.

அவளுக்கு அனைத்தும் கனவு உலகத்தில் நடப் பதுபோல் இருந்தது. அதே நேரத்தில், தன்னை பாலியல் தொழிலுக்கு அவள் தயார் செய்கிறாளோ என்ற பயமும் அவளுக்குள் ஏற்பட்டது. அதையும் அவள் வெளிப்படையாக கேட்டுவிட, ‘சீ அந்த தொழிலுக்கெல்லாம் நான் உன்னை அழைச்சிட்டு போகமாட்டேன்’ என்ற அவள், எதற்காக அவள் இப்படி எல்லாம் தயார் செய்யப்படுகிறாள் என்ற உண்மையை அப் போதுதான் சொன்னாள்.

அதை கேட்டதும் இவளுக்கு உதறல் எடுத்தது. ‘அந்த வேலைக்கு நான் வரலை’ என்றாள்.

‘உன்னைத் தேடி வரும் அதிர்ஷ்டத்தை வேண்டாம் என்று சொல்லாதே! ஒரு வருடமாக நான் அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய வீடு, விலை உயர்ந்த பர்னிச்சர், கிலோ கணக்கில் நகை.. இவை எல்லாம் ஒரு வருடத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. நீ ஒரே ஒரு தடவை மட்டும் என்னோடு வா. இரண்டு பேரும் சேர்ந்து அந்த காரியத்தை செய்வோம். வேலை முடிந்ததும் உனக்குரிய பங்கை தந்துவிடுவேன். அதற்கு பின்பு நீ விரும்பினால் மட்டும் என்னோடு வா.. இல்லாவிட்டால் ஒதுங்கிவிடு..’ என்று மூளைச்சலவை செய்தாள்.

இரண்டொரு நாள் கடந்ததும், ஒரே ஒரு நாள் மட்டும் அந்த வேலைக்கு அவளோடு செல்வது என்று, இவள் தீர்மானித்தாள்.

முதல் நாள்! இருவரும் வசதி படைத்த பெண்கள் போல் அலங்காரம் செய்துகொண்டு, நகைகளும் அணிந்துகொண்டு, விலை உயர்ந்த ஹேண்ட் பேக்குடன் ெரயிலில் ஏறினார்கள். ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த சீட்டில் உட்கார்ந்தார்கள். அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும், ஒரு ஆணும் பயணித்தார்கள். அவர்களோடு இவள் இனிக்க இனிக்க பேசினாள். எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள். இவர்கள் இருவரும் தூங்கவே இல்லை.

அதிகாலை மூன்று மணி. ‘அடுத்த அரை மணி நேரத்தில் இன்னொரு ரெயில் நிலையம் வரப்போகிறது. நமது வேலையை ஆரம்பிப்போம்’ என்று நடுத்தர வயது பெண் சொன்னாள். இவள் கை கால் உதற அந்த ெபாட்டலத்தை பிரித்தாள். அதில் ஒருவித ரசாயன பொடி இருந்தது. அதை விரித்து, நான்கு பேரின் முகத்தில்படும் விதத்தில் அருகருகேவைத்து பலமாக ஊதித் தள்ளினாள். சில நிமிடங்களில் நால்வரும் மயக்க நிலைக்கு செல்ல, அவர் களது காது, கழுத்து, கைகளில் கிடந்த நகைகளை மட்டும் அவசர அவசரமாக உருவி எடுத்துக் கொண்டு, ஒன்றும் அறியாத அப்பாவிகள்போல், அடுத்த ஸ்டேஷன் வரை காத்திருந்து இறங்கி விட்டார்கள்.

அடுத்து எதிர்புறமாக வந்த இன்னொரு பாசஞ்சர் ரெயிலில் ஏறினார்கள். பின்பு ஒரு பஸ், அடுத்து ஒரு கால் டாக்சி பிடித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

அப்பாடா.. என்று இவள் நிம்மதி பெருமூச்சுவிட, ‘இதோ உன் பங்கு..’ என்று, திருடியதில் கணிசமான நகைகளை அவளிடம் காட்டிவிட்டு, ‘இவைகளை உன்னால் விற்க முடியாது. விற்றால் மாட்டிக்கொள்வாய். அதனால் நானே நகைகளைவைத்துக்கொண்டு பணத்தை தருகிறேன்’ என்றவள், சில லட்சம் ரூபாயை அவள் கையில் கொடுத்தாள். இவளுக்கு இன்ப அதிர்ச்சி. பணத்தோடு வீடு போய் சேர்ந்தாள்.

ருசி கண்டவள் பின்பு அதே தொழிலுக்கு தொடர்ந்து அவளோடு சென்றாள். பலமுறை திருடினாள். இதோ இ்ப்போது கொலை குற்றவாளியாகி ஜெயிலில் கிடக்கிறாள்.

எப்படி?

கடைசியாக ரெயிலில் இவர்களிடம் சிக்கியது மிக வசதிபடைத்த குடும்பம். அவர்கள் உடல் எடை அதிகம் கொண்டவர்கள். இவர்கள் வழக்கம்போல் கைவரிசையை காட்டிவிட்டு அனைத்தையும் சுருட்டிவிட்டு சென்றுவிட, குண்டானவர்களில் ஒருவர் இதய நோயாளியாக இருந்திருக்கிறார். அவர் ரசாயனத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட மயக்க நிலையில் இருந்து மீளாமலே அப்படியே இறந்துவிட்டார் என்பது பின்னால்தான் தெரிந்தது.

இவர்கள் இருவரும் அதன் பின்பு சில மாதங்கள் ‘தொழிலுக்கு’ போகாமலே ஜாக்கிரதையாக இருந்தும், போலீஸ் அணுஅணுவாக முன்னேறி இவர்களை எப்படியோ பொறிவைத்து பிடித்துவிட்டது. அதனால் நீண்ட கால தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால், இப்படிப்பட்ட பெண்ணோ, ஆணோ ஏழைகளை குறிவைத்து ஆசை காட்டி, அவர்கள் வாழ்க்கையை மோசமாக்கி, மீதமுள்ள காலத்தை ஜெயிலில் கழிக்க வைத்து விடுகிறார்கள்.

கவனமாக இருந்துக்குங்க.. காலம் கெட்டுக் கிடக்குது..

- உஷாரு வரும்.