கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2018 4:15 AM IST (Updated: 8 July 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம், மங்காடு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜமணி, மார்த்தாண்டம் சந்திப்பு, வடக்கு ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஞாறான்விளை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது. அதன் மீது சந்தேகமடைந்த ஏட்டு ராஜமணி காரை தடுத்து நிறுத்தினார். பின்னர் காரை சோதனை செய்த போது காருக்குள் சாக்கு மூடைகளில் 800 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், இந்த ரே‌ஷன் அரிசி, நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ரே‌ஷன் அரிசியை சொகுசு காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் காரில் இருந்த டிரைவர் நெல்லை பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது42), செல்வம் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நித்திரவிளை அருகே மங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். உடனே டிரைவர், ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ஆட்டோவை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் சிறு, சிறு மூடைகளில் 600 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவையும், அரிசியையும் பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு குடோனிலும், ஆட்டோவை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

Next Story