2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது வரி உயர்வை வாபஸ் பெற குமாரசாமி முடிவு
2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று(திங்கட்கிழமை) கூடுகிறது.
பெங்களூரு,
2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு கர்நாடக சட்டசபை மீண்டும் இன்று(திங்கட்கிழமை) கூடுகிறது. மேலும் சட்டசபையில் வரி உயர்வு வாபஸ் குறித்த அறிவிப்பை குமாரசாமி வெளியிடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
விவசாய கடன் தள்ளுபடிகர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2–ந் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 5–ந் தேதி குமாரசாமி 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கியமாக ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அறிவித்தார்.
அரசுக்கு ஏற்படும் இந்த நிதிச்சுமையை சமாளிக்க பெட்ரோல்–டீசல் மீதான விற்பனை வரி, மின்சார பயன்பாட்டு மீதான வரி, மதுபானம் மீதான கலால் வரியை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடுத்தர மக்களை இந்த வரி உயர்வு வெகுவாக பாதிக்கும் என்றும், இது நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் மிகுந்த கவலை அடைந்துள்ளது.
கவர்னர் உரைக்கு நன்றிஇந்த வரி உயர்வுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதையடுத்து முதல்–மந்திரி குமாரசாமியை தொடர்பு கொண்ட கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா, வரிகள் உயர்வு குறித்து விவாதித்தனர். வரி உயர்வை வாபஸ் பெறுமாறு சித்தராமையா கூறியதாகவும், அதை குமாரசாமி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டம் 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு இன்று(திங்கட்கிழமை) மீண்டும் பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு குமாரசாமி இன்று பதிலளிக்கிறார்.
வரி உயர்வு வாபஸ்அதைத்தொடர்ந்து பட்ஜெட் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதம் வருகிற 11–ந் தேதி வரை நடக்கிறது. 12–ந் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு குமாரசாமி பதிலளிக்கிறார். அப்போது பெட்ரோல்–டீசல் மற்றும் மின்சார கட்டண வரி உயர்வை வாபஸ் பெறுவதாக அறிவிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.