தொண்டி புதுக்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக கோஷ்டி மோதல் 68 பேர் மீது வழக்குப்பதிவு
தொண்டி புதுக்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 68 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொண்டி,
தொண்டி புதுக்குடி கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அகற்றுவது தொடர்பாக இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக உருவானது. அப்போது இருதரப்பினரும் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இதுதொடர்பாக புதுக்குடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மனைவி காமாட்சி அளித்த புகாரின் பேரில் அதே ஊரைச்சேர்ந்த கோட்டைதுரை மகன் முனீசுவரன் மற்றும் 34 பேர் மீதும், அதே ஊரைச்சேர்ந்த சத்ருகன் மகன் சண்முகநாதன் (வயது20) என்பவர் அளித்த புகாரின் பேரில் சுப்பையா மகன் ராஜேந்திரன் மற்றும் 34 பேர் மீதும் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இதில் காயம் அடைந்த காமாட்சி, அவரது மகன் மணிவண்ணன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும், மற்றொரு தரப்பை சேர்ந்த சண்முகநாதன், கனகராஜ், காளியம்மாள் ஆகியோர் திருவாடானை அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
இந்த சம்பவத்தால் புதுக்குடி கிராமத்தில் பதற்ற நிலை நீடிப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் அதிகஅளவில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.
Related Tags :
Next Story