மாவட்ட செய்திகள்

வடமாடு மஞ்சுவிரட்டு; காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் + "||" + Northmastu Battles with bulls

வடமாடு மஞ்சுவிரட்டு; காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

வடமாடு மஞ்சுவிரட்டு; காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை,

சிவகங்கையில் உள்ள பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் 64-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பூக்கரகம் கட்டியும், தீச்சட்டிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. கோவில் முன்பு உள்ள காலி இடத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10-க்கும் மேற்பட்ட காளைகள் வடம் கொண்டு கட்டப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் ஒரு பிரிவிற்கு 10 பேர் வீதம் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் காளைகளை அடக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். இந்நிகழ்ச்சியை காண சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். முடிவில் காளைகளை அடக்கி வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி மணப்பட்டியை சேர்ந்த கார்த்தி(வயது 18), கீரணிபட்டி விவேக்(20), ராமச்சந்திரன்(26), மேலூர் தெற்குதெரு லெனின்(20), மலம்பட்டி பிரேம்(24), மேலூர் ராஜபாண்டி(21) ஆகிய 6 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி காலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், தொடர்ந்து பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், பிள்ளை தொட்டில் கட்டியும், மொட்டை போட்டும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன், பூசாரி பூமிநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...