முகூர்த்த நேரத்தில் இளம்பெண், காதலனுடன் ஓட்டம் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார்


முகூர்த்த நேரத்தில் இளம்பெண், காதலனுடன் ஓட்டம்  அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார்
x
தினத்தந்தி 9 July 2018 3:30 AM IST (Updated: 9 July 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சன்கூடு தாலுகாவில், முகூர்த்த நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓடிவிட்டார். இதையடுத்து மணமகனின் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார்.

மைசூரு,

நஞ்சன்கூடு தாலுகாவில், முகூர்த்த நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓடிவிட்டார். இதையடுத்து மணமகனின் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார். அவருக்கு மணமகன், தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தாலி கட்டினார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

திருமண வரவேற்பு

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மார்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணா. இவருக்கும், எச்.டி.கோட்டை தாலுகா ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(வயது 23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் 8–ந் தேதி(அதாவது நேற்று) நஞ்சன்கூடு தாலுகா உல்லள்ளி டவுனில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து நடைபெற இருந்தது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்திருந்தனர். பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவருக்கும் கொடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் திருமண வரவேற்பும், மண்டபத்தில் வைத்து நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் நாராயணா–நந்தினி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து மணமகன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட்டார். மணமகள் மற்றொரு அறையில் தங்க வைக்கப்பட்டார்.

மணப்பெண் காதலனுடன் ஓட்டம்

நேற்று காலையில் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் திருமண நடக்க இருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கியதையொட்டி மணப்பெண்ணை அழைத்து வர சிலர் மணமகள் அறைக்கு சென்றனர். அப்போது அங்கு மணமகள் இல்லை. அவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக மணமகன் குடும்பத்தினருக்கும், மணமகள் குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டானது.

அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் விசாரித்தபோது மணமகள் நந்தினி, ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், அதுபற்றி அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்ததும், முகூர்த்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அவர் மண்டபத்தில் இருந்து தப்பி தனது காதலனுடன் ஓடிவிட்டதும் தெரியவந்தது.

அத்தை மகளுக்கு தாலி கட்டினார்

இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர். கதறி அழுதனர். அவர்களை அவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் சமாதானம் செய்தனர். பின்னர் நாராயணாவுக்கும், நந்தினிக்கும் நடக்க இருந்த திருமணம் நின்றது. ஆனால் தங்களுடைய மகனுக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்ற முடிவில் இருந்து நாராயணாவின் பெற்றோர், தங்களுடைய உறவுக்கார பெண் ஒருவரை மணமகளாக தேர்ந்தெடுத்தனர். அந்த பெண் நாராயணாவின் அத்தை மகள் ஆவார்.

நாராயணாவை திருமணம் செய்து கொள்ள அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து குறித்த நேரத்தில் நாராயணாவுக்கும், திடீர் மணப்பெண்ணான நாராயணாவின் அத்தை மகளுக்கும் திருமணம் நடந்தது. புரோகிதர் மந்திரம் ஓத நாராயணா, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனது அத்தை மகளுக்கு தாலி கட்டினார். இதையடுத்து புதுமணத் தம்பதியை மண்டபத்திற்கு வந்திருந்த அனைவரும் வாழ்த்தினர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story