விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டர் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்


விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டர் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்
x
தினத்தந்தி 8 July 2018 9:45 PM GMT (Updated: 8 July 2018 7:23 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலவாழ்வு இயக்க நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டர்களை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா முள்ளிக்குளம் கிராமத்தில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகள் நலவாழ்வு இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கி, வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர்கள், பவர் டில்லர், மண்வள அட்டைகளையும், விதை கிராமத்திட்டத்தின்கீழ் உளுந்து விதை, உயிர் உரமான அசோஸ்பைரில்லம், தோட்டக்கலைத்துறையின் மூலம் மா, கொய்யா, நாவல், எலுமிச்சை, கொடிக்காபுளி, அத்தி மரக்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.


பின்னர் நிகழ்ச்சியில் கலெக்டர் சிவஞானம் பேசியதாவது:- ஒவ்வொரு விவசாயிகளின் வருமானத்தையும் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நாடு முழுவதும் வளரும் மாவட்டங்களாக 111 மாவட்டங்களை தேர்வு செய்து உள்ளது. இந்த விவசாயிகள் நலவாழ்வு இயக்கத்தின்கீழ் விருதுநகர் மாவட்டத்தல் 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில் குறைந்தபட்சம் 50 விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் மூலம் காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, மதிப்புக்கூட்டும் வேளாண் விளைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 835 விவசாயிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 25 கிராமங்களில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் 10 விதமான செயல்கள் ஒவ்வொரு பயிற்சியிலும் அளிக்கப்படுகிறது. மேலும், அரசின் மூலமாக வழங்கப்படும் நலத்திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் நலவாழ்வு இயக்கத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன், செயற்பொறியாளர் தாமஸ், தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story