கனிம வளங்களை எடுக்கவே 8 வழிச்சாலை திட்டம் பார்வர்டு பிளாக் குற்றச்சாட்டு
கனிம வளங்களை எடுக்கவே சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்று பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான கதிரவன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தேவபிரதாபிஸ்வாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, வருகிற டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய அளவிலான மாநாடு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் இந்தியா மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. வங்கி துறைகள் அனைத்தும் நலிவடைந்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களால் 3 லட்சம் கோடி வங்கி துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இவை அனைத்தும் நாட்டு மக்களின் பணம். பண மதிப்பிழப்பு திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஏழை மக்கள், விவசாயிகள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுப்பேற்று தமிழக அரசு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கதிரவன் கூறுகையில், பல்வேறு இடங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் பூங்கா உள்ளது. அங்கு அவரது சிலை நிறுவப்பட வேண்டும். மேலும் 6-ம் வகுப்பு பாட புத்தகத்தில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டபோது அடுத்த கல்வியாண்டில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த கல்வியாண்டிலேயே அவரது வாழ்க்கை குறிப்பு மீண்டும் பாடப்புத்தகத்தில் இடம்பெற கோரி வரும் 13-ந்தேதி மாவட்டந்தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கானது அல்ல. அங்கு கனிம வளங்களை எடுப்பதற்காகவே இத்திட்டம் என்றார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில நிதிச்செயலாளர் சுப்புராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் நல்லமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story