அமித்ஷா வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது திருநாவுக்கரசர் பேட்டி


அமித்ஷா வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 9 July 2018 4:45 AM IST (Updated: 9 July 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

அமித்ஷா வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கரூரில் அளித்த பேட்டியின் போது கூறினார்.

கரூர்,

காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் பெயரில் திட்டம் இருப்பதில் தவறில்லை. ஆனால் மோடி பிரதமர் ஆன பிறகு சுற்றுப்பயணம் மட்டுமே மேற்கொண்டிருக்கிறார். தொழில்துறை வளர்ச்சியடையாததால் பலர் வேலையின்றி தவிக்கின்றனர். என்ஜினீயரிங் படித்தால் எதிர்காலம் கேள்விக்குறி? என்கிற நிலைமை வந்திருப்பதால் அந்த படிப்பில் சேரகூட ஆர்வம் குறைந்திருக்கிறது. முந்தைய ஆட்சியை குறைசொல்லியே மத்திய, மாநில அரசுகள் காலத்தை கடத்தி தப்பித்து கொள்ளும் யுக்தியை கையாளுகின்றனர்.

ஏசுகிறிஸ்து, நபிகள் நாயகம் உள்ளிட்டோர் வருகிற மாதிரி சென்னைக்கு அமித்ஷா வருவதை பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மிகைபடுத்தி காட்டுகின்றனர். அவரது வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை. பா.ஜ.க.வுடன் தமிழகத்தில் கூட்டணி சேர எந்த கட்சி தயாராக இருக்கிறது என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அப்படி இருக்கையில் அமித்ஷா எப்படி கூட்டணி குறித்து பேச முடியும். பா.ஜ.க. நிர்வாகி எச்.ராஜா ஒரு கருத்தை கூறிவிட்டு, சிறிது நேரம் கழித்து நான் எப்போது கூறினேன்? என திருத்தி பேசுவார். இதனை டி.வி. விவாதங்களில் காண முடிகிறது.

இந்தியாவில் 100 ஹிட்லர்களை கொண்டு ஆட்சி நடக்கிறது என மம்தா பானர்ஜி கூறுவது, பா.ஜ.க. அரசினால் எவ்வளவு அவஸ்தைகளை அவர் சந்தித்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு உள்ளிட்டவை சர்வாதிகார நடவடிக்கை தான். தற்போது கூட ஒரே தேசம், ஒரே தேர்தல் என கூறுகின்றனர். அப்படியெனில் சில ஆண்டுகளில் நடந்து முடிந்த தேர்தலை கூட கலைத்து விடவா முடியும். மக்களை பாதிக்கும் விஷயமாக இருந்ததால் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடி அ.தி.மு.க. வெற்றி காணவில்லை. ஆனால் தற்போது ஒரே தேர்தல் வந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என கருதி அவர்கள் எதிர்க்கின்றனர். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி தொடரும். வீட்டிலிருந்து கருத்து சொன்னாலே 8 வழிச்சாலையை எதிர்க்கிறார்கள் என கூறி சிறையில் அடைப்பது பாசிச அரசாக செயல்படுவதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story