பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிப்பு: சிவகாசி, ராஜபாளையம் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை


பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிப்பு: சிவகாசி, ராஜபாளையம் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 July 2018 4:00 AM IST (Updated: 9 July 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு- புனலூர் இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லத்தில் இருந்து சிவகாசி, ராஜபாளையம் வழியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

செங்கோட்டை-புனலூர் இடையேயான 49.3 கி.மீ அகல ரெயில் பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டநிலையில், மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜீவ்கோகன் கடந்த மாதம் பாலக்காடு-புனலூர் இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிக்கப்படும் என்றும், கொல்லம்-தாம்பரம் இடையேயும், கொச்சுவேலி-வேளாங்கண்ணி இடையேயும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்தார்.


அதன்படி கொல்லம்-தாம்பரம் இடையே வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பாலக்காடு-புனலூர் இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று முதல் நெல்லை வரை நீட்டிக்கப்படுகிறது. புனலூரில் இருந்து இரவு 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி வழியாக காலை 6.30 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த ரெயிலில் வரும் பயணிகள் நெல்லைக்கு வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தொடர்ந்து சென்னை செல்ல வாய்ப்பு ஏற்படும். மாற்றுப்பாதையில் நெல்லையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதிகாலை 3.20 மணிக்கு புனலூர் சென்றடையும்.


கொல்லம்-மதுரை இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தபோது கொல்லத்தில் இருந்து ராஜபாளையம், விருதுநகர் வழியாக சென்னை, கோவை, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அகல ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பு இந்த ரெயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கொல்லத்தில் இருந்து தாம்பரத்திற்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், வாரம் இருமுறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொழில் நகரங்களான ராஜபாளையம், சிவகாசி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் நெடுந்தூர பயணத்திற்கு விருதுநகருக்கே வரவேண்டியுள்ளது.


எனவே ரெயில்வே நிர்வாகம் ராஜபாளையம் வழியாக ஏற்கனவே கொல்லத்தில் இருந்து இயக்கப்பட்ட சென்னை, கோவை, நாகூர், வேளாங்கண்ணி, ராமேசுவரம் ஆகிய ஊர்களுக்கான கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story