காளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


காளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 10:00 PM GMT (Updated: 8 July 2018 7:54 PM GMT)

காளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.


மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மக்களின் தேவைகளை அறிந்து, அதனை பூர்த்தி செய்யும் விதமாக அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினையே ஏற்படாத வண்ணம் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.


மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது காளவாசலில் ரூ.54 கோடி செலவில் பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story