சாக்கு தட்டுப்பாடு: நெல் கொள்முதல் பணி பாதிப்பு விவசாயிகள் விரக்தி


சாக்கு தட்டுப்பாடு: நெல் கொள்முதல் பணி பாதிப்பு விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 8 July 2018 10:45 PM GMT (Updated: 8 July 2018 8:20 PM GMT)

கபிஸ்தலம் பகுதியில் சாக்கு தட்டுப்பாட்டால் நெல் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் நெல், உளுந்து, எள், காய்கறி உள்ளிட்ட பண பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு (2017) ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக உளுந்து, எள், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. கோடை காலத்தில் பெய்த மழையால் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. உளுந்து, எள்ளின் விலை சரிவால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருந்தது.

இதன் காரணமாக இந்த ஆண்டு (2018) கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்தில் பண பயிர்களை கைவிட்டு நெல் சாகுபடியை மேற்கொண்டனர். இதில் நல்ல விளைச்சல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கோடை நெல் அறுவடை முடிந்து விட்டது. விளைந்த நெல்லை விவசாயிகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கபிஸ்தலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நெல் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

கொள்முதல் நிலையங் களில் விற்பனை செய்ய கொண்டு வரும் நெல்லை சேமித்து வைக்க வசதியாக தேவையான அளவு சாக்குகளை இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கபிஸ்தலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்வதற்கு சாக்குகள் இல்லை. இதனால் நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து தார்ப்பாயால் மூடி வைத்துள்ளோம்.

இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்வதால் நெல் மூட்டைகளை பாதுகாக்க சிரமமாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும். கொள்முதல் நிலையங்களில் சாக்குகளை அதிகளவில் இருப்பு வைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story