மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிய 28 மருத்துவ குழுக்கள் கலெக்டர் தகவல் + "||" + Collector of 28 medical teams to find out the diseases of children

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிய 28 மருத்துவ குழுக்கள் கலெக்டர் தகவல்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிய 28 மருத்துவ குழுக்கள் கலெக்டர் தகவல்
தஞ்சை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிய 28 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
தஞ்சாவூர்,

தஞ்சை காந்திசாலையில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை, கொச்சி அமிர்தா மருத்துவமனை, டெல்லி ஜெனிசிஸ் பவுன்டேசன், ஆர்.கே. மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின. முகாமை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


தஞ்சை மாவட்டத்தில் பள்ளி சிறப்பு நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஒரு வட்டாரத்திற்கு 2 மருத்துவக்குழுக்கள் வீதம் 28 குழுக்கள் அமைக்கப்பட்டு, குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு பிறவி குறைபாடு, வளர்ச்சி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் பாதிப்புகள் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிறவியிலேயே ஏற்படும் இருதய நோய், கண்புரை நோய், உதடுபிளவு மற்றும் காதுகேளாமை போன்ற குறைபாடுகள் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு, உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 220 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி காதுகேளாதோருக்கான சிறப்பு முகாம் இதே அலுவலகத்தில்(சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம்) நடக்கிறது. இதில் 18 வயதுக்குட்பட்ட காதுகேளாத குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கொச்சி அமிர்தா மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணகுமார், பிறவி இருதய குறைபாடு குறித்து விளக்கம் அளித்தார்.

இதில் தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் இளங்கோவன், மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் மலர்விழி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, தஞ்சை மருத்துவகல்லூரி முன்னாள் முதல்வர் சிங்காரவேலு, டாக்டர்கள் மணிராம்கிருஷ்ணா, பிரிஜேஷ் கோட்டயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் 91 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 11 குழந்தைகள் மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

முடிவில் மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் நிவேதா நன்றி கூறினார்.