வருமான வரித்துறை சோதனை 4-வது நாளாக நீடிப்பு: சத்துணவு முட்டைக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி முடக்கம்


வருமான வரித்துறை சோதனை 4-வது நாளாக நீடிப்பு: சத்துணவு முட்டைக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி முடக்கம்
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 8:40 PM GMT)

சத்துணவு திட்டத்திற்கு முட்டை வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 4-வது நாளாக சோதனை நடத்தி வருவதால், அந்த நிறுவனம் கோழிப்பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.10 கோடி முடக்கப்பட்டு உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

நாமக்கல்,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சத்துணவு முட்டைகளை திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டி பிரைடு கிராம் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வினியோகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் சத்துணவு முட்டை வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வந்த புகாரின் பேரில் கடந்த 5-ந் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக கோழிப்பண்ணைகள் கிடையாது. எனவே நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் வரை நாமக்கல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 400 கோழிப்பண்ணையாளர்களிடம் இருந்து இந்த நிறுவனம் வாங்கி, சத்துணவு திட்டத்துக்கு வினியோகம் செய்து வருகிறது.

இவ்வாறு முட்டைகளை வாங்கும் கோழிப்பண்ணையாளர்களுக்கு, அந்த நிறுவனம் சார்பில் ஆர்.டி.ஜி.எஸ். முறையில் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்படும். பொதுவாக ஒவ்வொரு வாரமும் வினியோகம் செய்யப்படும் முட்டைகளுக்கு அடுத்த வாரம் வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பணம் அனுப்பி வைக்கப்படும். தற்போது தொடர்ந்து 4-வது நாளாக சத்துணவு முட்டை வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் பண்ணையாளர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:-

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு நாங்கள் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் மூலம் வாரம் ஒன்றுக்கு சுமார் 2½ கோடி முட்டைகளை கொடுத்து வருகிறோம். கடந்த வாரம் கொடுத்த முட்டைக்கு இந்த வாரம் பணம் வழங்கப்படும். ஆனால் அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதால், சுமார் ரூ.10 கோடி வரை எங்களுக்கு வர வேண்டிய பணம் முடக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே இந்த கல்வி ஆண்டுக்கு சத்துணவு திட்டத்திற்கு முட்டை வினியோகம் செய்வதற்கான டெண்டர் நாளை மறுநாள் (புதன் கிழமை) நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story