மாவட்ட செய்திகள்

பிரசவத்தின் போது பெண் மரணம்: சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் சாவு உறவினர்கள் போராட்டம் + "||" + Female Death During Pregnancy: The Sick Relatives Struggle

பிரசவத்தின் போது பெண் மரணம்: சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் சாவு உறவினர்கள் போராட்டம்

பிரசவத்தின் போது பெண் மரணம்: சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் சாவு உறவினர்கள் போராட்டம்
பிரசவத்தின் போது பெண் மரணம் அடைந்ததை தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது. இதனால் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகள் கோகிலா (வயது 21). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நடப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதனிடையே கர்ப்பம் அடைந்த கோகிலா பாப்பாரப்பட்டி அருகே உள்ள வத்திமரதஅள்ளி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.


இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோகிலா கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 6-ந் தேதி அதிகாலை கோகிலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் பிரசவ அறைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு கோகிலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அப்போது கோகிலாவிற்கு ரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

வத்திமரதஅள்ளி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்த போது அங்கிருந்த செவிலியர்களின் கவன குறைவு காரணமாக தான் பிரசவத்தின் போது கோகிலாவிற்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று கோகிலாவின் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே தாயை பிரிந்து தனிமையில் இருந்த அந்த பெண் குழந்தைக்கு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனால் பதட்டம் அடைந்த கோவிந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்காத டாக்டர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவி மற்றும் குழந்தையை இழந்து வாடும் கோவிந்தசாமிக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மருத்துவத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.