மாதவரத்தில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது


மாதவரத்தில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது
x
தினத்தந்தி 9 July 2018 4:15 AM IST (Updated: 9 July 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

மாதவரத்தில், புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


செங்குன்றம்,

சென்னை மாதவரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருபவர் ராஜாராம் (வயது 50). இவரிடம் மாதவரத்தைச் சேர்ந்த மாலகொண்டையா என்பவர், தான் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மனு அளித்தார்.

அதற்கு ராஜாராம், மின் இணைப்பு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மாலகொண்டையா, இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மாலகொண்டையாவிடம் கொடுத்து, அதை ராஜாராமிடம் கொடுக்க அறிவுறுத்தினர்.

அதன்படி அந்த பணத்தை மாதவரம் ரவுண்டானா அருகே வைத்து ராஜாராமிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று ராஜராமை கைது செய்தனர்.

பின்னர் அவரை சோதனை செய்த போது அவரிடம் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 24 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மதுரவாயலில் உள்ள ராஜாராம் வீட்டை சோதனை செய்தனர். அங்கு கட்டுகட்டாக வைத்திருந்த ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


* ஆவடி பகுதியை சேர்ந்த நிர்மலா (42) நேற்று காலை வீட்டுக்கதவை பூட்டி விட்டு தேவாலயம் சென்றபோது மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த 7 பவுன் நகையை திருடி சென்றனர்.

* திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தொழிலாளி கணேசன் (45) நேற்று திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் பலியானார்.

* அண்ணாநகரை சேர்ந்த சன்ஜோன் (52) என்பவர் தனது வீட்டு முன் விளையாடிய 4 வயது சிறுமியை அழைத்து சென்று அவர் முன் நிர்வாணமாக நின்ற அவரை பொது மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியதோடு அவரை போலீசில் பிடித்து கொடுத்தனர்.

* புளியந்தோப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கொலை குற்றவாளியான கொருக்குப்பேட்டை மாரி (41) என்பவரை ரோந்து போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 விலை உயர்ந்த செல்போன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

* பெசன்ட் அவென்யூவில் வீட்டு வேலை செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த மகாலட்சுமியை வீட்டு உரிமையாளர் சுஸ்மிதாபிரியா மற்றும் அவரது உறவு பெண் ஆகியோர் வெந்நீர் ஊற்றியதில் இறந்தார். அவரது உடலை மகாலட்சுமியின் பெரியம்மா சுமித்ரா பெற்றுக்கொண்டு தகனம் செய்தார்.

Next Story