கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசு


கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசு
x
தினத்தந்தி 8 July 2018 10:30 PM GMT (Updated: 8 July 2018 9:08 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடந்து வந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கி சிறந்த மா உற்பத்தியாளர்கள், சிறந்த அரங்குகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

29 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை காண சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் பொதுமக்கள் வந்துள்ளனர். 45 அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது நடனம், சிலம்பாட்டம், மேஜிக் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடத்தப்பட்டன. அத்துடன் 50 அரசுத்துறை அரங்குகள், 80 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் விவசாயிகளுக்கு புதிய வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கும் வகையிலும், அரசின் சார்பாக புதியதாக தொடங்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டப் பணிகளை தெரிவிக்கும் வகையிலும், வேளாண்மைத்துறை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் சார்பாக அரசு அரங்குகள் செயல்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழும் வகையில் பொழுதுபோக்கு அம்சமாக பல்வேறு கேளிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் போது, அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் சிறந்த அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த துறைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, தோட்டக்கலைத்துறைக்கு முதல் பரிசும், காவல்துறைக்கு இரண்டாம் பரிசும், வேளாண்மை துறைக்கு மூன்றாம் பரிசும், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு துறை, வருவாய்த்துறை என முறையே 4, 5, 6 மற்றும் 7-ம் பரிசு என பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் பல்வேறு துறைகளுக்கு நற்சான்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன் விஜயகுமார் நன்றி கூறினார். 

Next Story