மாவட்ட செய்திகள்

சுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு + "||" + The governor's inquiry into the tsunami residence area is to create a new pond

சுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு

சுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு நிலவும் குடிநீர் பற்றாக் குறையை போக்க புதிதாக குளம்வெட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காலாப்பட்டு,

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை 7 மணி கவர்னர் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சுனாமி குடியிருப்பு வரை படத்தை வாங்கி பார்வையிட்ட அவர் அங்குள்ள வீடுகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.


அப்போது அதிகாரிகள் இங்கு மொத்தம் ஆயிரத்து 400 வீடுகள் உள்ளன என்றும், இந்த வீடுகளில் வசிப்பவர்களின் பயன்பாட்டுக்காக தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும், ஆனால் கிடைக்கும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என்றும் மேலும் சில விவரங்களையும் கவர்னரிடம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சுனாமி குடியிருப்பு பகுதி வளாகத்தில் உள்ள சுமார் 2 ஏக்கர் பரப்பிலான காலி இடத்துக்கு கவர்னர் சென்றார். இந்த காலியிடத்தில் புதிதாக குளம் ஒன்றை உருவாக்கும்படியும், மழைக்காலத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் மழைநீரை இந்த குளத்துக்கு திருப்பிவிடும் வகையில் திட்டமிட்டு அந்த குளத்தை உருவாக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு குளம் ஏற்படுத்தினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் அதன் மூலம் இங்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அங்குள்ள குடிநீரேற்றும் தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த மீனவர்கள் சிலர் கவர்னரிடம் வந்து தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அதனை போக்க நிரந்தர தீர்வு காணும்படியும் கோரிக்கை வைத்தனர். அதற்கு கவர்னர் குடிநீர் பிரச்சினை தொடர்பாகத்தான் தான் ஆய்வு செய்வதாகவும் விரைவில் அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி காலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது குடிநீர் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா? அங்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்தினார். மழை நீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத தொழிற்சாலைகளில் உடனடியாக அவற்றை ஏற்படுத்த அறிவுறுத்தினார்.

முன்னதாக இந்த ஆய்வுக்காக பஸ்சில் வந்த கவர்னருடன், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே வந்தனர். உயர் அதிகாரிகள் யாரும் அவருடன் வரவில்லை.